Republic Day 2023: குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரில் பலத்த பாதுகாப்பு

Republic Day 2023: குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குடியரசு தினத்தன்று கோவை மாநகரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்டங்களிலும் மாநகர்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை தீவிரப் படுத்தி உள்ளனர். அதன்படி கோவை மாநகரிலும் பாதுகாப்பு பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில்வே போலிசாருடன் இணைந்து கோவை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மோப்பநாய் உதவி கொண்டும் வெடிபொருள் கண்டறியும் நவீன கருவிகள் கொண்டும் ரயில் தண்டவாளங்கள் நடைமேடைகள் முழுவதும் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே துறை டிஎஸ்பி பிரமோத் நாயர் தலைமையில் ரயில்வே காவல் ஆய்வாளர் சுனில் குமார் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுடன் கோவை மாநகர காவல் துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். முக்கியமாக கோவை மத்திய ரயில் நிலையம், வடகோவை, போத்தனூர், சிங்காநல்லூர் ரயில் நிலையங்கள் உட்பட முக்கிய பேருந்து நிலையங்கள் மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்கள், தலைவர்களின் சிலைகள் உள்ள பகுதிகளில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ரயில் நிலையத்தில் மாநகர காவல் துறையினர் ரயில்வே காவல்துறையுடன் இணைந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதுமட்டுமின்றி பார்சல் அலுவலகங்களிலும் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Republic Day Security

இந்த சோதனைகள் குடியரசு தினம் முடிகின்ற வரை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறினார். தற்பொழுது கோவை மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் பதிவேடு சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் விடுதிகளில் பதிவேடு பராமரிக்கவில்லை என்றாலோ அங்கு தங்கம் நபர்கள் குறித்து பதிவு செய்யவில்லை என்றாலோ நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாநகரில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அது தவிர முக்கிய இடங்களில் தொடர்ந்து வாகன தணிக்கைகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.