அணு ஆயுதப் போருக்கு தயாரான இந்தியா – பாகிஸ்தான்: புதிய தகவல்| India-Pakistan ready for nuclear war: New information

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ எழுதியுள்ள புத்தகத்தில், ‘கடந்த, ௨௦௧௯ல் இந்தியா, பாகிஸ்தான் அணு ஆயுதப் போருக்கு தயாராகின. நாங்கள் தலையிட்டு இரு நாட்டையும் சமாதானப்படுத்தினோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த, ௨௦௧௯ல் ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ௪௦ சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

விமானப் படை

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் விமானப் படை நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது நம்முடைய விமானம் ஒன்றும் சேதமடைந்தது.

அதில் இருந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே பேச்சு நடந்து கொண்டிருந்தது.

இந்தப் பேச்சில் அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மைக் போம்பியோவும் பங்கேற்றார். இந்தியா பதிலடி கொடுத்ததற்கு அவர் அப்போது பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சராகவும், சி.ஐ.ஏ., எனப் படும் புலனாய்வு அமைப்பின் தலைவராகவும் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் தொடர்பாக மைக் போம்பியோ புத்தகம் எழுதியுள்ளார்.

வெளியுலகுக்கு தெரியாது

இதில், அவர் கூறியுள்ளதாவது:

இந்தியா, பாகிஸ்தான் இடையே, ௨௦௧௯ல் நடந்த விமானப் படை மோதலைத் தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த வெளியுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார்.

பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும், இதை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவரிடம் சற்று பொறுமையுடன் இருக்கும்படி கூறிவிட்டு, பாகிஸ்தான் தரப்புடன் பேசினேன். பாகிஸ்தானின் உண்மையான தலைவரான ராணுவத் தளபதி குமர் ஜாவத் பஜ்வாவுடன் பேசினேன். இதைத் தொடர்ந்து இரு தரப்பும் அமைதியடைந்தன.

இரு நாடுகளும் அணு ஆயுதப் போரை விரும்பவில்லை என பரஸ்பரம் கூறி, இரு நாட்டையும் சமாதானப்படுத்தினோம்.

நாங்கள் எடுத்த இந்த நடவடிக்கைகள் வெளியுலகுக்கு தெரியாது. சரியான நேரத்தில் செயல்பட்டதால், அணு ஆயுதப் போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுஷ்மா குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் எதிர்ப்பு

தன் புத்தகத்தில், மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறித்து மைக் போம்பியோ குறிப்பிட்டுள்ள வார்த்தைகளுக்கு நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.’இந்தியாவின் வெளியுறவு துறையில் அப்போது அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய தலைவராக நான் கருதவில்லை. ‘பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவரான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தான் மிகவும் நெருக்கமாக பணியாற்றினேன்’ என, மைக் போம்பியோ குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:சுஷ்மா சுவராஜ் குறித்து மைக் போம்பியா குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை பார்த்தேன். சுஷ்மா சுவராஜ் மீது எனக்கு மிகப் பெரும் மதிப்பு உள்ளது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றவன் நான். அவர் குறித்து மைக் போம்பியோ கூறியுள்ள மரியாதை குறைவான வார்த்தைகளுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அதே நேரத்தில் இந்த புத்தகத்தில் ஜெய்சங்கர் குறித்து மைக் போம்பியோ சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். ‘அவரைப் போன்ற ஒரு சிறந்த வெளியுறவு அமைச்சர் இருக்க முடியாது. அவர் ஆங்கிலம் உட்பட ஏழு மொழிகளில் பேசக் கூடியவர். என்னுடையதைவிட அவருடைய ஆங்கிலம் மேம்பட்டதாக இருக்கும். தன் நாடு மற்றும் பிரதமருக்காக மிகவும் சிறப்பாக பணியாற்றுபவர்’ என, மைக் போம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.