”இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய பயனாளிகளாக நீங்கள் இருப்பீர்கள்”- மோடி பேச்சு!

இளைஞர்களிடம் ஆற்றல், உற்சாகம், ஆர்வம் மற்றும் புதுமையான மனப்பான்மை உள்ளது என்றும், வருங்கால இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய பயனாளிகளாக நீங்கள் இருப்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
குடியரசு தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இன்று டெல்லியில் என்எஸ்எஸ் மற்றும் என்சிசி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய பிரதமர், “நாட்டினுடைய கனவையும், எதிர்கால லட்சியத்தையும் கைதூக்கிக் கொண்டுபோகக் கூடியவர்கள் நீங்கள் தான். இளைஞர்களான உங்களிடம் தொலைநோக்கு சக்தி உள்ளிட்ட அனைத்தும் உள்ளது. இளைஞர்களான உங்களின் நேர்மையான கருத்துக்கள் தான் என்னை இரவு பகலாக உழைக்க வைக்கிறது. வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள். அதை உருவாக்குவதற்கான மிகப்பெரிய பொறுப்பு உங்கள் தோள்களில் உள்ளது. இளைஞர்களான உங்களிடம் ஆற்றல், உற்சாகம், ஆர்வம் மற்றும் புதுமை மனப்பான்மை உள்ளது. உங்களுடைய வெற்றி தான் இந்தியாவுடைய வெற்றி.
image
விண்வெளித்துறை முதல் சுற்றுச்சூழல் துறை வரையிலான பல்வேறு துறைகளில், இந்தியா உலகத்தின் எதிர்காலத்திற்காகவும் சேர்த்து உழைத்து வருகிறது. இந்தியாவின் இந்த உலகப்பார்வையானது, நம் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். இந்தியாவின் சாதனைகளில் உலகம் தனக்கான புதிய எதிர்காலத்தைக் காண்கிறது.
நாட்டின் எல்லைப்பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் அனைத்து வேலைகளையும் இந்தியா செய்துவருகிறது. அப்படி சவால்கள் ஏற்பட்டால் அதற்கு பதிலளிக்கும் முதல் குரலாக இளைஞர்கள் குரல் இருக்கும். அதற்கான பயிற்சிகளும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான சிறந்த வழிகளை உருவாக்குவதன் மூலம் வெற்றியை காணமுடியும். அனைவரின் முயற்சியால் மட்டுமே வெற்றி அடையமுடியும். அதனால் ஒரே அணியாக ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்றார்.
image
தொடர்ந்து ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிப்பது குறித்து, இளைஞர்கள் கல்லூரிகளில் விவாதிக்க வேண்டும், ஸ்வச் பாரத் முதலிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இறுதியாக, இளைஞர்களின் இலக்குகள் நாட்டின் முன்னேற்றத்தோடு இணையும் போது, வெற்றிக்கான நோக்கம் பெரிதாக இருக்கிறது. உங்கள் வெற்றியே இந்தியாவின் வெற்றியாக இருக்கும். ஏபிஜே அப்துல் கலாம், ஹோமி ஜஹாங்கீர் பாபா, சிவி ராமன் மற்றும் தயான்சந்த் ஆகியோரின் தனிப்பட்ட வெற்றியானது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுவது போல், உங்கள் இலக்குகளும் இந்தியாவின் இலக்கோடு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.