லக்னோ: உத்தரபிரதேசத்தில் 11 போலி ஹோமியோபதி கல்லூரிகள் செயல்பட்டு வந்ததால், அந்த கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 234 கல்லூரிகளில் ஹோமியோபதி பார்மசி டிப்ளமோ (டி.எச்.பி) பட்டம் வழங்கப்படுகிறது. இந்த கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர்.
ஆனால் மேற்கண்ட கல்லூரிகள் சில போலியாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. அதனால் உத்தரபிரதேச ஹோமியோபதி மருத்துவ வாரியம், மேற்கண்ட அனைத்து கல்லூரிகளையும் தணிக்கைக்கு உட்படுத்தியது. அதன்படி முதற்கட்டமாக 10 மாவட்டங்களுக்கு உட்பட 136 கல்லூரிகளின் தணிக்கை முடிந்துள்ள நிலையில், அவற்றில் 11 கல்லூரிகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கல்லூரிகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதால், அந்த கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மேற்கண்ட 11 கல்லூரிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாநில மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.