`ஒரு நாள்ல 8 நிமிஷம்தான் வேலை; வருஷம் ரூ.40 லட்சம் சம்பளம்!’-ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு கடிதம்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா தன்னுடைய 30 ஆண்டு பணிக்காலத்தில் 55 முறை ‘டிரான்ஸ்பர்’ செய்யப்பட்டிருக்கிறார். இவர் தற்போது பரபரப்பு பேச்சொன்றை பேசியுள்ளார்.

‘நேரான மரங்கள் தான் முதலில் வெட்டப்படுகின்றன’ என்றொரு சொலவடை உண்டு. அதே போன்றுதான், நேர்மையான அதிகாரிகள் அரசுகளால் பந்தாடப்படுவது அனைத்து மாநிலங்களிலும் அரங்கேறும் காட்சியாகி விட்டது. அதற்கொரு உதாரணம் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா. இவர் தன்னுடைய 30 வருட பணிக்காலத்தில் 55-வது முறையாக ‘டிரான்ஸ்பர்’ செய்யப்பட்டிருக்கிறார். அறிவியல் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்த இவர், அண்மையில் ஆவணக்காப்பகத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆவணக்காப்பகத் துறைக்கு இவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது இது நான்காவது முறை.

image
இந்த நிலையில், தனக்கு ஆவணக்காப்பகத் துறையில் போதுமான வேலை இல்லை என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைவர் பதவியில் பணியமர்த்தும்படியும் ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா, அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த கடிதத்தில், ”ஆவணக்காப்பகத் துறையில் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 8 நிமிடங்கள் மட்டுமே வேலை இருக்கிறது. ஆவணக்காப்பகத் துறையின் ஓராண்டு பட்ஜெட்டே ரூ.4 கோடிக்கும் குறைவுதான். இவ்வாறிருக்க, ஆண்டு ஊதியமாக எனக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படுகிறது. இது இந்த துறையின் மொத்த பட்ஜெட்டில் 10% ஆகும். எனவே கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருப்போருக்கு சிவில் சர்வீசஸ் வாரியம் சட்ட விதிகளின்படி வாரத்துக்குக் குறைந்தது 40 மணிநேரம் வேலை இருக்கும் பணியை ஒதுக்க வேண்டும்” என்றுள்ளார்.

மேலும் அதில், “ஊழல் என்பது எப்படி பரவும் என்பது உங்களுக்கு தெரியும். ஊழலைப் பார்க்கும்போது என் உள்ளம் புண்படுகிறது. ஊழல் புற்றுநோயை வேரறுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது பணி வாழ்க்கையை தியாகம் செய்துள்ளேன். அரசின் கொள்கைப்படி ஊழலை வேரறுக்காமல், ஒரு குடிமகன் தனது உண்மையான திறனை அடைவதற்கான கனவை ஒருபோதும் நனவாக்க முடியாது. அவன் அன்றாடம் பிழைப்புக்காக போராடும் நிலைக்கு தள்ளப்படுவான்.

image
நான் எப்போதுமே ஊழலுக்கு எதிரான போராட்டக்களத்தில் முன்னின்று உள்ளேன். ஊழலை ஒழிப்பதில் லஞ்ச ஒழிப்புத்துறை அரசின் முக்கிய அங்கமாக உள்ளது. எனது பணி வாழ்க்கை முடியும் நிலையில், நான் லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக பணியாற்ற விரும்புகிறேன். எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், ஊழலுக்கு எதிராக உண்மையான போர் தொடுப்பேன். எவ்வளவு உயர்வானவராக இருந்தாலும், வல்லமை படைத்தவராக இருந்தாலும் ஊழல் செய்தால் விட்டு விடமாட்டேன்” என்று அக்கடிதத்தில் அசோக் கெம்கா கூறி உள்ளார்.

மேலும் அவர், 1987இல் பி.கே.சின்னசாமிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி, ‘ஒரு அரசு அதிகாரிக்கு அவரது அந்தஸ்துக்கு ஏற்ப பதவி வழங்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்காவின் பணிக்காலம் வரும் 2025ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.