புதுடில்லி கிழக்கு லடாக்கில் எல்லைப் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொள்ளும் ௬௫ இடங்களில், ௨௬ இடங்களை நம் ராணுவம் இழந்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா – சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்னை உள்ளது. கிழக்கு லடாக்கில் ௨௦௨௦ல் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதையடுத்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து இரு நாட்டு படைகளும் விலக்கி கொள்ளப் பட்டுள்ளன. அதே நேரத்தில் பல பகுதிகளில் இரு நாட்டுப் படைகளும் தொடர்ந்து முகாமிட்டுஉள்ளன.
இந்நிலையில் மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மாநாடு, சமீபத்தில் புதுடில்லியில் நடந்தது. இதில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
லடாக்கின் லே நகரின் எஸ்.பி.,யான பி.டி. நித்யா தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கிழக்கு லடாக்கில், இரு நாட்டு படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நம் ராணுவம் வழக்கமாக ரோந்து மேற்கொள்ளும் பகுதிகளை, சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது.
இங்கு, காரகோரத்தில் இருந்து சுமுர் வரையிலான எல்லையில், ௬௫ இடங்களில் ரோந்து மையங்கள் உள்ளன. ஆனால், சீனா தற்போது ஆக்கிரமித்துள்ளதால், ௨௬ ரோந்து மையங்களில் நம் ராணுவம் ரோந்துப் பணியை மேற்கொள்ள முடியவில்லை.
‘சலாமி ஸ்லைசிங்’ எனப்படும் அடி மேல் அடி வைத்து நிலத்தை ஆக்கிரமிப்பது தான் சீன ராணுவத்தின் பாணியாகும். அதுபோலவே, கிழக்கு லடாக்கில் நம் எல்லைகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ராணுவத்தின் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:
எல்லையில், சீன ராணுவம் நம் இடங்கள் சிலவற்றை ஆக்கிரமித்துள்ளது. படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இதில் ஏற்படும் முடிவுகளின்படி படைகள் விலக்கி கொள்ளப்படும்.
தற்போதைய சூழ்நிலையில் இந்த ௨௬ ரோந்து மையங்களில் நம் ராணுவம் ரோந்து மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், நம்முடைய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூற முடியாது. எல்லையில் எந்த நிலத்தையும் நாம் இழக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்