சபரிமலையில் உண்டியல் எண்ணும் பணி திடீர் நிறுத்தம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் சமீபத்தில் முடிந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்ததால் கோயில் வருமானம் முந்தைய வருடங்களை விட அதிகரித்தது. இந்த சீசனில் மட்டும் இதுவரை கோயில் மொத்த வருமானம் ₹320 கோடியை தாண்டியுள்ளது. வழக்கமாக மண்டல, மகரவிளக்கு சீசனில் மொத்த வருமானம் ₹250 கோடிக்குள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி முதல் நாணயங்களை எண்ணும் பணியில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் நாளுக்கு நாள் நாணயங்கள் குவிந்ததால் அவற்றை எண்ண முடியாமல் ஊழியர்கள் திணறினர்.

இதைத்தொடர்ந்து நாணயங்களை உடனடியாக எண்ணி முடிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது. இதனால் நாணயங்களை எண்ணுவதற்காக 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த சில வாரங்களாக இவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தநிலையில் பெரும்பாலான ஊழியர்களுக்கு சிக்கன் குனியா, காய்ச்சல் உள்பட நோய்கள் பரவின. இதையடுத்து இன்று முதல் நாணயங்கள் எண்ணும் பணியை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.