”துவண்டு கிடந்த பாலிவுட்டை மீட்ட பாட்ஷா!” – அமோக வரவேற்பால் பதானுக்கு கூடும் காட்சிகள்!

ஜீரோ படத்துக்கு பிறகு தொடர்ச்சியாக ராக்கெட்ரி, லால் சிங் சதா, பிரமாஸ்திரா படங்களில் சிறப்புத் தோற்றத்திலேயே வந்த ஷாருக்கான் 4 ஆண்டுகளுக்கு பின் பதான் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார்.

தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பதான், பான் இந்திய படமாக இன்று வெளியாகியிருக்கிறது.

பதான் பட ட்ரெய்லர் வெளியான போதே தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்ததற்காக எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது பல விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்குமே வித்திட்டது. ட்விட்டரில் BoycottPathaan என்றெல்லாம் ஹேஷ்டேக்களும் பறந்தன.

இதுபோக அசாம் முதல்வர் ஹேமந்த் ஷாருக் கான் யாரென்றே தெரியாது என பேசி அவரை எதிர்ப்பதாகச் சொல்லி மேலும் பதான் படத்துக்கு பப்ளிசிட்டியையே ஏற்படுத்தி கொடுத்துவிட்டார். அதன் பிறகு ஷாருக்கானே அசாம் முதல்வரிடம் ஃபோனில் பேசவே அந்த சலசலப்பும் அடங்கியது.

இந்த நிலையில் இன்று இந்தியா முழுக்க ஷாருக்கானின் பதான் படம் ரசிகர்களின் ஆரவாரத்தோடு வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் 5,500 திரைகளிலும், ஓவர்சீஸ் அளவில் 2,500 ஸ்க்ரீன்களிலும் பதான் படம் வெளியாகியிருக்கிறது என பாலிவுட் திரைப்பட விமர்சகர் தரன் ஆதர்ஷ் குறிப்பிட்டுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானை ஹீரோவாக பார்க்கவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வந்திருக்கிறார்கள். படத்தின் ஷாருக்கானின் அறிமுக காட்சி, சண்டை காட்சிகள் வரும் போதெல்லாம் ஆரவாரம் செய்து குதூகலித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

படத்துக்கு ரேட்டிங்கும் 5க்கு மூன்று ஸ்டார்களுக்கு மேலே அனைத்து தரப்பினராலும் கொடுக்கப்பட்டு வருகிறது. சல்மான் கான் கேமியோ ரோல் செய்திருக்கிறார். எல்லா பக்கமும் பதான் படம் க்ளீன் ஹிட் அடிக்கத் தொடங்கியிருக்கிறது என்றும் ட்விட்டரில் விமர்சங்கள் பறந்துக் கொண்டிருக்கின்றன.

பாலிவுட்டில் மட்டுமல்லாமல் பதான் படம் வெளியான அனைத்து மொழிகளிலுமே நல்ல விமர்சனங்களையே பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோக, கூட்டம் அலைமோத தொடங்கியதால் ரிலீசான முதல் நாளே பதான் படத்துக்கு இந்தியா முழுவதும் கூடுதலாக 300 காட்சிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதாம். மேலும் ஷாருக்கானின் திரை வாழ்வில் சிறப்பான ஆக்‌ஷன் படமாக பதான் இருக்கும் என்றும் விமர்சனங்கள் பதிவிடப்பட்டிருக்கின்றன.

முன்னதாக, அண்மைக் காலமாக நேரடி இந்தி திரைப்படங்களுக்கு பெரிதளவிலான விமர்சனங்களும், கலெக்‌ஷனும் இல்லாமல் இருந்தது. தற்போது ஷாருக்கானின் பதான் படத்தின் முதல் நாளன்றே ரசிகர்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருப்பதால் பாலிவுட்டின் செல்வாக்கு இதன் மூலம் மீட்டெடுக்கப்படும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்றும் பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கான் என்பதை அவர் நிரூபித்து விட்டார் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.