ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் புதிய தலைமை செயலக கட்டிட திறப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.
இக்கட்டிட திறப்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள் வருகை தர உள்ளனர். ஆதலால், இவ்விழாவினில், தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலினும் கலந்துக்கொள் வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் ஹுசைன் சாகர் அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக, ரூ.650 கோடி செலவில் தெலங்கானாவின் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு, அதன் இறுதி கட்டப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இக்கட்டிடத்திற்கு பி.ஆர். அம்பேத்கர் பெயரை அம்மாநில அரசு சூட்டியுள்ளது.
இக்கட்டிடத்தின் திறப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள டெல்லி, கேரளா, பஞ்சாப், உள்ளிட்ட மாநில முதல்வர்கள், மேலும், பல்வேறு முன்னாள் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மத்தியில் 3-வது அணியை உருவாக்க தீவிரம் காட்டி வரும் தெலங்கானா முதல்வர், தனது டிஆர்எஸ் கட்சியை, பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என பெயரை மாற்றி, தேசிய கட்சியாக அறிவித்துள்ளார்.
பிஆர்எஸ் கட்சியின் முதல் பொதுக்கூட்ட நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கம்மம் பகுதியில் நடந்தது. இதில், டெல்லி, கேரளா, பஞ்சாப் முதல்வர்கள் உட்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், பலரும் எதிர்பார்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை. ஆதலால், இம்முறை வரும் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெற உள்ள தெலங்கானா தலைமை செயலக கட்டிட திறப்பு விழாவில் தமிழக முதல்வர் கலந்துகொள்வார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள தெலங்கானா மாநிலஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அழைப்பு விடுப்பாரா ?என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் தெலங்கானாவில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்வையிடல்..: புதிய தலைமை செயலக கட்டிடத்தை நேற்று மாலை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பார்வையிட்டார்.