புதுடெல்லி: உயர்ந்து வரும் கோதுமை விலையைக் கட்டுப்படுத்த, இருப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமை விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தேவை அதிகரிக்கும் போது விநியோகத்தை ஊக்குவிக்கவும், பொது சந்தையில் விலைவாசி உயரும் போது அதனைக் கட்டுப்படுத்தவும் திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம் உணவு தானியங்களை மொத்த சில்லரை விற்பனையாளர்கள் அல்லது தனியார் வர்த்தகர்களுக்கு விற்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, தற்போதைய சந்தையில் கோதுமை மாவு விலை கிலோவுக்கு ₹38 வரை உயர்ந்துள்ளதால், கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரசின் இருப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை விற்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது.