இந்தியா முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் புதுப்பட்டி, ஒசஅள்ளி, வேடியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் தேவை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் தமிழக அரசின் உத்தரவையும் மீறி புதுப்பட்டியில் நடந்த கூட்டத்தில் ஒரு சில அதிகாரிகளை தவிர பெரும்பாலான அரசு துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு ஊராட்சி சார்பில் தகவல் தெரிவித்தும் அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளாத நிலையில் பொதுமக்கள் அடிப்படை தேவை எப்படி நிறைவேற்றப்படும் என கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் புதுப்பட்டி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காத அனைத்து அரசு துறை அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சித் தலைவரை வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசு அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம பொதுமக்களின் இந்த அதிரடி நடவடிக்கையை கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.