கொச்சி: தேசியவாத காங்கிரஸ் லட்சத்தீவு எம்.பி. முகம்மது பைசல். கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது இவருக்கும் லட்சத்தீவு முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சலே என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது முகமது சலே கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.
தாக்குதல் தொடர்பாக கவரெட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் முகம்மது பைசல் உள்ளிட்ட 37 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்வழக்கில் முகம்மது பைசல், அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு அண்மையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து முகம்மது பைசலின் எம்.பி. பதவி கடந்த 14-ம் தேதி பறிக்கப்பட்டது.
தண்டனைக்கு எதிராக கொச்சி உயர் நீதிமன்றத்தில் முகம்மது பைசல் உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் நால்வருக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கேரள உயர் நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது.