இந்தியா முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவின் பொழுது பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இதன் காரணமாக இந்த முறை குடியரசு தின விழாவில் எவ்வித சச்சரவுகள் இன்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் என தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது.
கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் எந்தவித சாதி பாகுபாடும் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தன்னை தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த திருப்பக்குழி ஊராட்சி மன்ற தலைவராக சுகுணா தேவேந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அதே ஊராட்சியில் இருக்கும் அரசு பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்ற சென்றுள்ளார். அப்பொழுது அரசு பள்ளியில் இருந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி பாலச்சந்தர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா தேவேந்திரனை தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்துள்ளார்.
இதனால் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா தேவேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். ஏற்கனவே பட்டியல் இன தலைவர்கள் கொடி ஏற்றுவதில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என தலைமைச் செயலாளர் அறிவுரைத்திருந்த நிலையில் இச்சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.