இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் 2ஆவது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், அதன்பின்னர் கூடுதல் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும்.
தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்தபோதும் இந்தியாவில் பெரியளவில் தாக்கம் ஏற்படாததற்கு காரணம் கிட்டதட்ட முழுமையாக தடுப்பூசி செலுத்தியதே என கூறப்படுகிறது.
இந்நிலையில், நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, அந்நிறுவனத்தின் இன்கோவேக் எனப்படும் தடுப்பு மருந்து, அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ளும் வகையிலான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றது. இது மூக்கு வழியாக செலுத்தும் மருந்தாகும்.
இதனால், நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்துசெலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது.
இந்நிலையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இன்கோவாக் என்ற பெயரில் மூக்கு வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ரூ.325 என்ற விலையிலும், தனியாருக்கு ரூ.800 என்ற விலையிலும் வழங்கப்படுகிறது. இன்கோவாக் தடுப்பூசியை அமைச்சர்கள் மனசுக் மாண்டவியா, ஜிதேந்தர் சிங் அறிமுகம் செய்தனர்.