திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளைக் காலை நடைபெறவுள்ளது. கடந்த 18 -ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. யாக பூஜைகளுக்காக 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 23 -ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை முதல் 6 -ம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. இதனைத்தொடர்ந்து இன்று மாலை 7 -ம் கால யாக பூஜைகள் தொடங்கவுள்ளன. இன்று காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தடிகளில் உள்ள தெய்வங்களுக்கான கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இன்று அதிகாலை பழநி மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள உபதெய்வங்களான பாதவிநாயகர் கோயில், படிப்பாதையில் உள்ள இடும்பன் கோயில், கடம்பன்கோவில், கருப்பணசாமி சுவாமி கோயில், கிரிவீதியில் உள்ள ஐந்து மயில்கள், கோவில் உட்பட 80க்கும் மேற்பட்ட திருக்கோயில் மற்றும் தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 9.50 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாளைக் காலை பழநி மலைக்கோயில் மூலஸ்தானத் தங்க விமானம், ராஜகோபுரம் மற்றும் மூலவர் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி பழநி வரும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடம், கும்பாபிஷேகத்தைக் காண ஆங்காங்கே திரைகள், மூன்று இடங்களில் அன்னதானம் எனப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.