2050-ம் ஆண்டுக்குள் பஞ்சாபில் நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களின் மகசூல் பாதிக்கும்!

2050-ம் ஆண்டிற்குள் வெப்பநிலை உயர்வால் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து முக்கிய பயிர்களின் மகசூலும் பாதிக்கும் என காலநிலை ஆய்வு கூறுகிறது.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றத்தால் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் ஐந்து முக்கிய பயிர்களின் மகசூல் பாதிப்பு குறித்து பஞ்சாப் விவசாய பல்கலைகழகத்தின் விவசாய பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு கடந்த 35 வருடங்களின் (1986-2020) மழை மற்றும் வெப்பநிலை தரவுகளின்படி மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில், வெப்பநிலை அதிகரிக்கும்போது பெரும்பாலான பயிர்களின் மகசூல் குறைந்துவிடுகிறது என்றும், வெப்பநிலை மாற்றம் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கோதுமை

வெப்பநிலை மாற்றத்தால் 2050-ம் ஆண்டிற்குள் பஞ்சாப் மாநிலத்தில் சோள மகசூலில் 13 சதவீதமும், பருத்தி மகசூலில் 11 சதவீதமும், கோதுமை மற்றும் உருளை கிழங்கு மகசூலில் 5 சதவீதமும், அரிசி மகசூலில் 1 சதவீத குறையும் என இந்த ஆய்வு தகவல் கூறுகிறது.

இப்படி வெப்பநிலை மாற்றம் தொடர்ந்தால், 2080-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் மகசூல் சோளம் 24 சதவீதமும், பருத்தி 24 சதவீதமும், அரிசியில் 3 சதவீதமும் குறையும் என இந்த ஆய்வு கூறுகிறது.

அறச்சலூர் செல்வம்

வெப்பநிலை மாற்றத்தால் பயிர்களில் ஏற்படும் பாதிப்பு குறித்து இயற்கை வேளாண்மைச் செயற்பாட்டாளர் அறச்சலூர் செல்வம் கூறியதாவது, “சுற்றுசூழலில் உள்ள சூரிய வெளிச்சம், நீர், பருவநிலை மாற்றம், வெப்பநிலை பொறுத்துதான் பூமியில் ஒவ்வொரு உயிரினம், அதன் உடல் அமைப்பு, அதன் செயல்பாடுகள் உருவாகிறது.

சூரிய வெளிச்சம், நீர், பருவநிலை மாற்றம், வெப்பநிலை ஆகியவை குறிப்பிட்ட காலஅளவில் மாற்றமடையும். ஒரு டிகிரி வெப்பநிலை மாற வேண்டுமானால், அதற்கு ஒரு லட்ச வருடமோ அல்லது இரண்டு லட்ச வருடமோ ஆகும். ஆனால் அந்த வெப்பநிலை மாற்றமும் நுட்பமானதாகவே இருக்கும். அதனால் உயிரினங்கள் மற்றும் பயிர்களின் உடல் அமைப்பும் வெப்பநிலைக்கு ஏற்றவாறே இருக்கும்.

வெப்பநிலை

சமீப காலமாக, மனிதன் செயல்பாடுகளால் வெப்பநிலை மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. இந்த வெப்பநிலை மாற்றம் பல லட்ச ஆண்டுகள் கழித்து நடக்க வேண்டியவை, ஆனால் சில பத்து ஆண்டுகளிலேயே நடக்கிறது. இந்த வெப்பநிலை மாற்றம் வேகத்திற்கு ஏற்றவாறு தாவரங்களால் தங்களை தகவமைத்து கொள்ள முடியவில்லை. ஆகையால்தான், இந்த விளைச்சல் குறைபாடு ஏற்படுகிறது.

பொதுவாக வெயில் அதிகமாக இருக்கும்போது ஒளிச்சேர்க்கை அதிகமாக இருக்கும் என நாம் நினைப்போம். ஆனால் வெப்பநிலை அதிகமாகும்போது செடிகள் தாங்கள் மண்ணில் இருந்து எடுத்த நீரை காக்க இலை துவாரங்களை மூடிக்கொள்ளும். இதனால் விளைச்சல் குறையும். மேலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது காற்றில் இருக்கும் ஈரப்பதமும் குறைந்துவிடும்.

1960 -களில் இருந்த வெப்பநிலைக்கு நாம் தற்போது செல்ல வேண்டுமானால், நாம் சுமார் 500-600 ஆண்டுகளுக்கு கார்பன் டை ஆக்சைட் வெளியீட்டை மிகவும் குறைக்க வேண்டும். அப்போதுகூட மிகவும் குறைவான அளவே இந்த வெப்பநிலை குறையும்.

வெப்பநிலை மாற்றத்தால் விளைச்சல் குறையும்போது, உணவு பற்றாக்குறை ஏற்படும். அதனால் அதிக இடைவெளிகளில் மரங்களை நட்டு, அந்த இடைவெளிகளில் பயிர்களை நடவேண்டும். இதற்கு இடைவெளி சாகுபடி, சந்து வழி சாகுபடி என்று பெயர். இப்படி செய்வதன்மூலம் ஓரளவுக்கு பயிர்களுக்கு வரும் ஈரப்பதத்தை காக்கமுடியும் மற்றும் வெப்பநிலையையும் சிறிது குறைக்க முடியும்” என்று விளக்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.