மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் “Lock-in” செயல்முறைக்கு முன்னதாக, நடைபெறும் வழக்கமான அல்வா கிளறும் விழா நடந்தது. இதில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், நிதியமைச்சக செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அல்வா கிளறும் விழா மத்திய பட்ஜெட் தயாரிப்பின் இறுதி கட்டத்தை குறிக்கிறது.
அல்வா கிளறும் விழா
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜனவரி 26 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிளறும் விழாவில், அல்வாவை விநியோகம் செய்தார். பாரம்பரியமாக, பட்ஜெட் ஆவணத்தை இறுதி செய்வதற்கு முன் இந்த விழா நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை அல்வா விழா கொண்டாடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்கு முன் செய்யப்படும் சடங்கு
ஹல்வா சடங்கு ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படுகிறது. ஆனால் 2022 ஆம் ஆண்டில், கோவிட் காரணமாக இந்த சடங்கு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டும், கொரோனா பாதிப்பால், பட்ஜெட் அச்சடிப்பதற்கு முன் நடத்தப்பட்ட அல்வா விழா நடைபெறவில்லை. முக்கிய ஊழியர்கள் பணியிடங்களில் ‘lock-in’ ஆவதற்கு முன் ஹல்வா கிளறப்படுகிறது. ‘lock-in’ காலம் என்று அழைக்கப்படும், அந்த நேரத்தில் முக்கிய அதிகாரிகள் அமைச்சகத்திற்குள் தங்கி, தங்கள் குடும்பங்களை சந்திக்காமல் விலகி இருந்து, இறுதி பட்ஜெட் ஆவணம் தொடர்பாக முக்கிய தகவல்களை ரகசியமாக பாதுகாக்கிறார்கள்.
இனிப்பு செய்யப்படுவது ஏன்?
பட்ஜெட்டுக்கு முன் அல்வா விழாவை ஏற்பாடு செய்வது கண்டிப்பாக பின்பற்றப்படுகிறது. ஹல்வா விழாவுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை, பட்ஜெட் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் நிதி அமைச்சகத்தில் இருப்பார்கள். நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் சுமார் ஒருவாரம் குடும்பத்திடம் இருந்து ஒதுங்கி இருப்பார்கள். இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா நடைபெறும் இடம்
நிதியமைச்சர் சட்டியில் அல்வாவைக் கிளறி, அதன் பிறகு அதிகாரிகளுக்குப் பரிமாறும் இந்த விழா நிதி அமைச்சகத்தின் நார்த் பிளாக் என்னும் வடக்குத் தொகுதியின் அடித்தளத்தில் நடைபெறுகிறது. அங்கு சிறப்பு அச்சகம் உள்ளது. மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகுதான் இந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நார்த் பிளாக்கில் இருந்து வெளியே வருவார்கள்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில், மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். முழு பட்ஜெட் கூட்டத்தொடரில் 27 அமர்வுகள் நடைபெறும். கூட்டத்தொடரின் முதல் கட்டம் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும். சுமார் ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும்.