Siraj: தன்னைத்தானே செதுக்கியவன்; மீண்டெழுந்த ஃபீனிக்ஸ் பறவை; சிராஜ் நம்பர் 1 ஆன கதை!

விமர்சித்தவர்கள் காணாமல் போகுமளவு ஒருநாள் போட்டிகளின் உலக நாயகனாக ஐ.சி.சி தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு அதுவும் கம்பேக் கொடுத்த ஓராண்டு இடைவெளிக்குள்ளேயே முன்னேறியுள்ளார் முகமது சிராஜ்.

Siraj

சிராஜின் ரஞ்சித்தொடர் நாட்களிலிருந்தே அவர்மீது வெளிச்சவட்டம் விழுந்து கொண்டுதான் இருந்தது. ரெட்பால் கிரிக்கெட்டைக் கட்டி ஆள்வார் என ஆருடங்கள் அனுமானித்தன. 2016/17 சீசனில் ஹைதராபாத்தின் சார்பாக அதிக விக்கெட்டுகளை சாய்த்தது என உள்ளூரளவில் மட்டுமல்ல சர்வதேசப் போட்டிகளிலும் சிறப்பாகவே செயல்பட்டார். 2020/21 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முக்கிய வீரர்கள் பங்கேற்க முடியாமல் போன இக்கட்டான நிலையில் அவரது மொத்தத்திறனும் காட்சிப்படுத்தப்பட்டது. மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என தரவுகள் எண்களில் வடிப்பதைத் தாண்டியும் அத்தொடரில் அவரது தாக்கமிருந்தது. இவ்வளவு இருந்தாலும் லிமிடெட் ஃபார்மட்டில் சிராஜின் திறன் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டேதான் இருந்தன.

பிசிசிஐ உள்ளிட்ட மற்ற அனைவரும் ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு அவர் ஒத்துவர மாட்டார் என அவரை கடந்து மறந்து போயிருந்தனர். கோலியும் ஆர்சிபியும் மட்டுமே அவரது மீதான நம்பிக்கை தளராமல் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தனர். மற்றபடி பல மாதங்களை இந்திய வண்ணஜெர்ஸிக்குள் புகமுடியாத ஏக்கத்தோடுதான் சிராஜ் கழிக்க வேண்டியிருந்தது. வேரியேஷன்களின் வேள்விக்களமான டி20 ஃபார்மட்டில் 2017 நவம்பரில் அறிமுகமான சிராஜ் அதன்பிறகு பெரியளவில் அங்கே வாய்ப்புக்களைப் பெறவில்லை.

ஒருநாள் போட்டியிலோ நிலைமை இன்னமும் மோசமானது, 2019 ஜனவரியில் நடைபெற்ற தனது அறிமுகப்போட்டியான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப்பின் பிளேயிங் லெவனுக்குள் அவரால் நுழையவே முடியவில்லை. மூன்றாண்டுகள் அதற்காக அவர் தவமிருக்க வேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில் தரவரிசைப் பட்டியலில் 100-வது இடத்திற்கும் அப்பால் எங்கேயோ கண்காணாத இடத்திலிருந்தது சிராஜின் பெயர்.

லட்சியப்பிடிப்போடும் வெல்ல வேண்டுமென்ற தவிப்போடும் இருப்பவர்களுக்கான பசி எப்போதுமே அகோரமாகத்தானே இருக்கும்? அது சிராஜிடமும் தகித்துக் கொண்டிருந்தது. அதுதான் அவரை பேராபத்தானவராக ஆர்ப்பரிக்க வைத்தது. கடந்தாண்டு ஒருநாள் ஃபார்மட்டுக்குள் திரும்பவும் காலெடுத்து வைத்தது முதல் இந்த விக்கெட் மெஷின் அரங்கை அதிரவைத்துக் கொண்டிருப்பதும் அதனால்தான். அதே வேட்கையோடுதான் கடந்தாண்டு ஜுனில்கூட தரவரிசைப் பட்டியலில் 97-வது இடத்தில் இருந்த சிராஜ் சொற்ப மாதங்களிலேயே முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக கடந்தாண்டு பிப்ரவரியில் சிராஜின் கம்பேக் நடந்தேறியது. அத்தொடரில் மூன்று போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார். எக்கானமியோ 4-க்கும் கீழே. சிராஜின் சீற்றம் அங்கிருந்துதான் டேக்ஆஃப் ஆகத் தொடங்கியது. இங்கிலாந்து, ஜிம்பாப்வே, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து என அதன்பிறகு சந்தித்த ஒவ்வொரு எதிரணியின் பேட்ஸ்மேனையும் அவரது பந்துகள் மிரட்டிப் பார்த்திருக்கின்றன. கடந்தாண்டு ஆடிய 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் அந்தாண்டுக்கான இந்தியாவின் லீடிங் விக்கெட் டேக்கராகவும் சிராஜ் ஜொலித்தார். வெறும் 4.62 என்னும் எக்கானமியும் அவரது ஆளுமையை எடுத்து இயம்பும். ஐசிசியின் கடந்தாண்டுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய பௌலரும் சிராஜ்தான்.

Siraj

பும்ரா இல்லாத நிலையில் அணி ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரிடமும் அவரது இடத்தை நிரப்புவதற்கான கூறுகளை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. அதில் எல்லாமுமாக இருக்க முடியாவிட்டாலும் பெரும்பாலான விஷயங்களை சிராஜால் செய்து காட்ட முடிந்திருக்கிறது.

சிராஜிடமுள்ள சுட்டிக்காட்டப்பட வேண்டிய விஷயம் அவர் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை எப்படி செதுக்கிக் கொண்டு முன்னேறி வந்திருக்கிறார் என்பதுதான். இந்திய பௌலிங் பயிற்சியாளரின் பட்டை தீட்டலும் அதற்கு வழிகோலிட்டது என்ற செய்திகள் சமீபத்தில் வெளியில் வந்தன. இருப்பினும் சிராஜின் மணிக்கணக்கான உழைப்பும், தகவமைத்துக் கொள்ளத் தயங்காத பாங்கும்தான் அவரை உயர்நிலையை எய்த வைத்துள்ளது.

உம்ரான் போல அதிவேகம் அவரிடமில்லைதான். எனினும் தனக்கான வேகத்தில் லைன் மற்றும் லெந்தை அவர் கட்டுப்படுத்தும் விதமும், துல்லியமும் அவரது சிறப்பம்சங்கள். அவற்றையும் இந்த சில மாதங்களில் பலமடங்கு மெருகேற்றி இருப்பதுதான் இன்னமும் கூடுதல் வலுசேர்க்கிறது. அவரது உயரம் அவருக்கான பலம்கூட்ட அவரது ஆஃப் கட்டர்கள், ஒயிடு யார்க்கர்களோடு கூர்தீட்டப்பட்டுள்ள பவுன்சர்கள் அவரை இன்னமும் அபாயமானவராக அடையாளம் காட்டுகிறது. சீமையும் ஸ்விங்கையும் தனது கைப்பாவைகளாக மாற்றியுள்ளார். உழன்று கொண்டே வரும் Wobble Seam அவரது இன்னமும் ஒரு ரகசிய ஆயுதமாகி பேட்ஸ்மேன்களையும் கலங்கடிக்கிறது.

புதுப்பந்தில் பும்ரா செய்து கொண்டிருந்த மாயத்தை முழுமையாக இல்லாவிட்டாலும் குறை தெரியாதவாறு சிராஜ் சிறப்பாகவே ஈடுகட்டுகிறார். அதோடு மிடில்ஓவர்களிலும் சோடை போவதில்லை. ஸ்பின்னர்களுக்கு நடுவே ஒரு பிரேக் த்ரூ வேண்டும் பார்ட்னர்ஷிப் அறுபட வேண்டுமென்றால் சிராஜின் பந்து அந்தக் கட்டத்திலும் சீறிப் பாய்கிறது. அதுவும் அவர் இந்த ஓராண்டில் ஆடியுள்ள போட்டிகளில் பெரும்பாலானவை ஃப்ளாட் டிராக்குகளில் பௌலர்களுக்கு சவால் விட்டவைதான். அதிலும் விக்கெட்டுகளை தேத்தியதோடு ரன்ரேட்டுக்கும் அவரால் செக் வைக்க முடிந்ததும் பவர்பிளே ஓவர்களில் எதிரணியைக் கட்டிப்போட முடிந்ததும் இந்தியாவை முன்னிலைப்படுத்துகின்றன.

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ரொம்பவே நன்றாக ஆடியிருக்கிறார். ஐந்தே போட்டிகளில் 14 போட்டிகளை இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக வீழ்த்தி ஒருநாள் உலகக்கோப்பை வரவிருக்கும் ஆண்டை கோலாகலமாகத் தொடங்கியுள்ளார். தற்போது கிடைத்திருக்கும் முதலிடம் என்னும் அரியணை அவரது பயணத்தில் இன்னுமொரு மைல்கல். இந்தியாவை சேர்ந்த பௌலர்களில் முன்னதாக ஏற்கனவே ஐவர் அதில் அமர்ந்திருக்கின்றனர். அதில் வேகப்பந்து வீச்சாளர்களான கபில்தேவ், பும்ரா ஆகிய இருவருமே இந்திய வேகப்பந்துவீச்சுக்கு புது சாயம் பூசியவர்கள்.‌ அப்படியொரு இடத்தைதான் சிராஜ் தனது கடின முயற்சியால் எட்டியிருக்கிறார்.

இன்னமும் அவரது டி20 ஃபார்மட் பெரிய நம்பிக்கை அளிப்பதாக இல்லை, இப்போதைக்கு அது தேவையும் இல்லை. இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள 50ஓவர் உலகக்கோப்பைக்காக இவரை முழுவீச்சில் ஆயத்தப்படுத்த வேண்டியது மட்டுமே பிசிசிஐ தற்போதைக்கு செய்ய வேண்டும். ஐபிஎல்லில் ஆடி அவரது ஒருநாள் ஃபார்மட் ரிதத்துக்கு பாதிப்பு வராததை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

Siraj

போர்க்களத்தில்கூட தனக்கான ஆயுதங்களை உண்டாக்கும் சாமர்த்தியம் ஒரு வீரனுக்கு வேண்டும். அதேபோல் தனக்குள்ளிருந்த அக்னிப்பறவைக்கு சிறகுகள் தந்து, ஒருநாள் போட்டிகளில் சாதிப்பதற்கான தனக்கான ஒவ்வொரு திறனையும் மேம்படுத்தி இருக்கிறார் சிராஜ். அது அவரை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதோடு அவருக்கான இடத்தையும் நிரந்தரமாக்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.