தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகம் அமைக்கும் பணியை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த உதயநிதி ஸ்டாலின், முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க அலுவலகம் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான சுமார் 1,000 சதுர அடி இடத்தை, தி.மு.க மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் ஆக்கிரமித்து, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த விவகாரம் மாவட்ட தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து, புகார் செய்திருக்கும் செல்வத்திடம் பேசினோம். “திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு வலங்கைமான் சொந்த ஊர். கும்பகோணம் ரயில் நிலையம் அருகில் எனக்குச் சொந்தமாக 6,523 சதுர அடி இடம் இருக்கிறது. என் இடத்துக்கு வட புறத்தில் வடக்கு மாவட்டத்துக்கான தி.மு.க அலுவலகக் கட்டடம் கட்டப்படுகிறது. அதற்கான ஏற்பாட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான கல்யாணசுந்தரம் தலைமையில் தி.மு.க-வினர் செய்து வருகின்றனர். அதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றது.
அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டதுடன், அவர் கையாலேயே முதல் செங்கல்லை எடுத்து வைத்து பணியை தொடங்கினார். தற்போது தி.மு.க கட்சி அலுவலகம் கட்டுவதற்காக கல்யாணசுந்தரம் கூறியதன் பேரில், அவருடைய மகன் முத்துசெல்வன் என்னுடைய அனுமதி இல்லாமலேயே என் இடத்தில் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெடிமேட் சுற்றுச்சுவரை சேதப்படுத்தி 1,000 சதுர அடி இடத்துக்கு முன்னால் தள்ளி சுவரை அமைத்தார்.

என்னுடைய இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக கல்யாணசுந்தரத்திடம் கேட்டதற்கு, “உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்” என்றார். இதையடுத்து நான் ஆன்லைன் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், விசாரணை எதுவும் செய்யவில்லை. இதையடுத்து கும்பகோணம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 2-ம் தேதி வரை அந்த இடத்தில் யாரும் நுழையக்கூடாது என தடைவிதித்தது. அத்துடன் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், கல்யாணசுந்தரம் இருவரையும் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில் என் இடத்தையும் சேர்த்து தி.மு.க அலுவலகம் கட்டும் பணியை தொடங்கியிருக்கின்றனர். இதற்காக நான் அமைத்திருந்த சுற்றுச்சுவரை சேதப்படுத்தியிருக்கின்றனர். இதையறிந்து இடத்துக்குச் சென்ற நான், அங்கு பணி செய்து கொண்டிருந்த பணியாளர்களிடம் கேட்டதற்கு, `நீ வந்தால் மாவட்டச் செயலாளர் உன்னை அடித்து விரட்டச் சொல்லியிருக்கிறார். ஓடி விடு’ என மிரட்டினர். இது தொடர்பாகவும் நான் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்.

தி.மு.க அலுவலகம் கட்டுவதற்காக என்னுடைய இடம் மட்டுமல்லாமல், அரசு இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தலையிட்டு என்னுடைய இடம் எனக்கு கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து கல்யாணசுந்தரம் எம்.பி-யிடம் பேசினோம். “செல்வம் இடத்தை நாங்கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. எங்களுக்கு அதற்கான அவசியமில்லை. அவர் தனக்குச் சொந்தமான இடத்தை ஒட்டியிருக்கும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார். நாங்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக தவறான தகவலை பரப்பி வரும் அவர் மீது, மானநஷ்ட வழக்கு தொடரப்போகிறேன்” என்றார்.