நேற்று இரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜகுளம் பகுதியில் குளக்கரை அருகே நின்ற பென்ஸ் சொகுசு காரில் ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த காதலன் திடீரென காருக்கு தீவைத்தார். இதில் கார் முழுவதும் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனே அங்கு திரண்டு வந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இது தொடர்பாக போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், காதலன் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மருத்துவர் என்பது தெரியவந்தது. அவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு மருத்துவம் படித்து முடித்துள்ளார். அங்கு இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு பழகி வந்தனர்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு காதலன் நேற்று மாலை மாணவியை சந்திப்பதற்காக வந்துள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவரும் பல இடங்களை சுற்றிப்பார்த்து பிறகு காஞ்சிபுரம் ராஜகுளம் குளக்கரை அருகே காரை நிறுத்திவிட்டு பேசி கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த காதலன் தனது ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை தீவைத்து எரித்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.