சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் குடிசை மாற்று வாரிய பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் 42 இவர் சினிமா படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடன கலைஞராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தில் நடித்துள்ளார் இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் மோர் மார்க்கெட் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் வசித்து வரும் இன்ப வள்ளி என்ற பெண்ணுடன் பல வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு ரமேஷ் அந்த பெண்மணியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரமேஷ் அந்த பெண்ணுடன் புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரமேஷின் முதல் மனைவி சித்ரா தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என பேசன் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு காவல் நிலையத்திற்கு வந்து ரமேஷ் இனி இரண்டாவது மனைவி உடன் வாழ விருப்பமில்லை என எழுதி கொடுத்துவிட்டு முதல் மனைவியுடன் சென்றுவிட்டார். சில நாட்களிலேயே மீண்டும் இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இந்நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் ரமேஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது மனைவி வீட்டிற்க்கு சென்று, மது அருந்த பணம் கேட்டு உள்ளார். அப்போது அவர் பணம் இல்லை என்று கூறவே ரமேஷ் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த பேசன் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த ரமேஷின் முதல் மனைவி சித்ரா, தனது கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பேசன் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பேசன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.