மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்திலுள்ள பிம்ப்ரி மகிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி. 22 வயதாகும் இந்தப் பெண் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தா. அவருக்கு அதே ஊரில் மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். ஆனால், சுபாங்கி அதே கிராமத்தில் தன்னுடைய உறவினர் ஒருவரைக் காதலித்து வந்தார். இது குறித்து சுபாங்கி தனக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தவரை நேரில் சந்தித்து, தான் அதே கிராமத்தில் வேறு ஒரு வாலிபரைக் காதலிப்பதாகக் கூறினார். இதனால் இரு வீட்டாருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு, திருமணம் நின்று போனது.

திருமணம் நின்று போனதால் சுபாங்கியின் பெற்றோருக்கு தலைகுனிவு ஏற்பட்டது. இதனால் சுபாங்கியை அவருடைய தந்தை, சகோதரர் மற்றும் சில உறவினர்கள் கடந்த 22-ம் தேதி தோட்டத்துக்கு அழைத்துச் சென்றனர். தோட்டத்தில் வைத்து சுபாங்கியை அவர்கள் அனைவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தனர்.
பின்னர் அங்கேயே இரவோடு இரவாக உடலை தீவைத்து எரித்தனர். எரியாத உடல் பாகங்களை தோட்டத்தில் புதைத்துவிட்டு வந்துவிட்டனர். வீட்டில் வந்து எதுவும் நடக்காதது போன்று இருந்து கொண்டனர். சுபாங்கி காணாமல்போனது குறித்து அவருடைய தோழி விசாரித்து பார்த்தார். அப்போது, சுபாங்கியை யாரோ கடத்திவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஆனால், போலீஸில் புகார் செய்யவில்லை. இதையடுத்து சுபாங்கியின் தோழி இது குறித்து பெண்கள் கமிஷனுக்கு புகார் செய்தார். பெண்கள் கமிஷன், உள்ளூர் போலீஸாருக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டது.

போலீஸார் உடனே இது குறித்து விசாரித்தபோது, மாணவி கொலைசெய்யப்பட்டது உண்மைதான் என்று தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தந்தை, சகோதரி, சித்தப்பா என மொத்தம் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.