காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், நெல்வாய், தண்டலம் உட்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட 4,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 165 நாட்களாக பரந்தூர், ஏகாம்பரம் உட்பட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து நான்கு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. எனினும் விமான நிலையம் அமைய உள்ள 13 கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே சிங் சில நிகழ்ச்சிகளுக்காக திருநெல்வேலி வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் வி.கே சிங்கிடம் பரந்தூர் விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும். இரண்டாவது விமான நிலையம் அமைவது குறித்தான அனைத்து ஆய்வு அறிக்கைகளையும் தமிழக அரசுதான் தாக்கல் செய்துள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என இடத்தை தேர்வு செய்து கொடுத்தது தமிழக அரசுதான் மத்திய அரசு அல்ல” என பதில் அளித்தார்.