பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்று பனிஹால் பகுதியில் தொடங்கியது. குண்டுகள் துளைக்காத வாகனத்தில் வந்த ராகுல் காந்தி காசிகுந்த் பகுதியிலிருந்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
அவரை வரவேற்க அதிக அளவிலான மக்கள் திரண்டிருந்தனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ராகுலுக்கு பாதுகாப்பு வழங்க போதிய காவல் துறை அதிகாரிகள் இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஒற்றுமை நடைப்பயணம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இன்று ஒருநாள் நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஆனால் காவல் துறை பாதுகாப்பில் எந்த ஒரு குறைபாடும் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in