எனக்கு 34 வயதாகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. கல்லூரிப் படிப்பை முடித்தபோது, வீட்டில் எனக்குத் திருமண ஏற்பாடு செய்து, 22 வயதில் திருமணத்தை முடித்தனர். கணவர் ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். ஆனால், வீட்டில் வற்புறுத்தி அவருக்கு என்னைத் திருமணம் செய்து வைத்தது, பிறகுதான் தெரிய வந்தது. என்னுடன் அவர் வாழவே இல்லை. முகம் கொடுத்துப் பேசக்கூட மாட்டார்.
மூன்று மாதங்கள் இப்படியே கழிந்தன. என் பெற்றோர், ‘இப்படி ஒரு பிரச்னை இருக்கிறதே எங்களுக்குத் தெரியாது. எங்க பொண்ணு வாழ்க்கையை பாழாக்கிட்டீங்க’ என்று கோபப்பட்டார்கள். அவர் பெற்றோரோ, ’கொஞ்ச நாள் அப்படித்தான் இருப்பான், சீக்கிரம் சரியாகிடுவான்’ என்றார்கள். ஆனால் நான்காவது மாதம், திடீரென ஒரு நாள் அவர் காணாமல் போனார். வீட்டை விட்டு வெளியேறி, தான் விரும்பிய பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு, வெளிமாநிலத்துக்குச் சென்றுவிட்டார் என்று தகவல்கள் சொல்லப்பட்டன.

நான் என் பிறந்த வீட்டுக்குத் திரும்பினேன். எல்லோரும் என்னை அய்யோ, பாவம் என்றார்கள். எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. ஆனால், அந்தக் காயம் ஆறக்கூட நேரம் கொடுக்காமல் என் பெற்றோர் எனக்கு மீண்டும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். ‘சீக்கிரமே நாம கல்யாணத்தை முடிக்கலைன்னா நீ இப்படியே இருந்துபோயிடுவ. அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கும்போது உனக்கு என்ன விதியா இப்படி இருக்கணும்னு’ என்று காரணம் சொன்னார்கள். அதை ஏதோ ஒரு ஈகோ பிரச்னைபோல எடுத்துக்கொண்டு பரபரப்பாக மாப்பிள்ளை தேடினார்கள். ஒரு வருடத்தில் என் திருமணத்தையும் முடித்தார்கள்.
இம்முறையும் திருமணம் என்பது தண்டனையாகவே எனக்கு முடிந்தது. கணவர் உட்பட அந்தக் குடும்பமே ஆணாதிக்கக் குடும்பம். கணவர் அடிப்பது, மாமியார் வீட்டை விட்டு என்னை வெளியே அனுப்புவது என்று குடும்ப வன்முறைகளை அனுபவித்தேன். இந்த முறை என் பெற்றோருக்கு நான் படும் கஷ்டங்களைவிட, ஊர் என்ன சொல்லும் என்ற கவலையே பெரிதாக இருந்தது. ‘ரெண்டாவது கல்யாணமும் முடிஞ்சுபோனா உன்னை என்னதான் பண்ணுறது? ஊரு உலகம் நம்மளை என்ன சொல்லும்? கஷ்டமோ நஷ்டமோ பொறுத்துட்டு வாழு’ என்று அறிவுரை தந்தார்கள்.
ஒவ்வொரு நாளும் நரகமாக நகர்ந்த அந்த வாழ்க்கை, ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. கணவர் அடித்ததில் உடம்பு முழுக்கத் தழும்புகள், தையல்கள் என்றாகிப்போன மகளை கண்ணீருடன் என் பெற்றோர் அழைத்து வந்தனர்.

பட்ட பாடுகளால், இனியும் ஒரு கல்யாணம் என்ற எண்ணமே என் பெற்றோருக்கோ, எனக்கோ வரவில்லை. கடைசி வரை இப்படியே இருக்க முடிவு செய்தோம். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் நிம்மதியுடன் இருக்கிறேன். என் கடந்த காலத்தில் எட்டு வருடங்களாக என் வாழ்க்கையில் எனக்குத் துளியும் கிடைக்காத நிம்மதி என்பதால், அது எனக்கு மிகவும் முக்கியமாகப் படுகிறது.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் ஒரு கோவில் திருவிழாவில் என் உறவினர் ஒருவரை சந்திந்தேன். அவருக்கு 40 வயதாகிறது. திருமணம் தள்ளிப்போனதால் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார். தொலைபேசி எண்கள் பகிர்ந்துகொண்டு, இருவரும் பேச ஆரம்பித்தோம். உறவுப் பேச்சுகள் முடிந்து, ஒரு கட்டத்தில் நட்பு பேச்சுகள் ஆரம்பித்தன.
பின்னர் அவர் என்னை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா என்றும் கேட்டார். நான் அடியோடு மறுத்துவிட்டேன். எனக்கு திருமணத்தில் இருந்த நம்பிக்கை எல்லாம் முடிந்துபோய்விட்டது. மேலும் எனக்கு அது இப்போது தேவையாகவும் இல்லை. இவருடனான இந்த நட்பில் இருக்கும் சந்தோஷம், இது திருமண உறவான பின் இருக்குமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அவர் விடாமல் என் பெற்றோரிடம் பேசினார்.

ஏற்கெனவே நடந்த தவறுகளுக்கு அவர்கள்தான் காரணம் என்பதால், ‘இதுல இனி நாங்க முடிவெடுக்க மாட்டோம். உன் முடிவுதான்’ என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள் என் பெற்றோர்.
இந்தக் காதலை மறுப்பதா, ஏற்பதா… என்ன செய்வது நான்?