வேலூரில் உதவி காவல் ஆய்வாளரின் மகன், திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை முகத்தை சிதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலமதி மலை பகுதியில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இளம்பெண்ணின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரை கொலை செய்து பாறை மேல் இருந்து தூக்கி வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையின் நீட்சியாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிப்புரியும் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு என்பவருடைய மகன் கார்த்தி (23) என்பவரை அழைத்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. கார்த்திக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த குணப்பிரியா என்ற பெண்ணும் பேஸ்புக் மூலமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு யாருக்கும் தெரியாமல் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின்னர் குணப்பிரியா சிதம்பரத்தில் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர் 2 நாட்களுக்கு முன்பு வேலூருக்கு வந்த குணப்பிரியாவை கார்த்தி பாலமதி மலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குணப்பிரியா தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும், ஒன்றாக வாழவேண்டும் எனவும் கார்த்தியிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு கார்த்தி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில் கார்த்தி குணப்பிரியாவை அங்கு கிடந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த குணப்பிரியா உயிரிழந்தார். பின்னர் கார்த்தி குணப்பிரியாவின் முகத்தை சிதைத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in