சென்னை: “ஜீபூம்பா என்ற ஒரு வார்த்தை சொன்ன உடனே சென்னை, சிங்கப்பூராக மாறிவிடாது. நிச்சயமாக சென்னையை முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவார்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “28 கால்வாய்கள் முதல்வர் அறிவுறுத்தலில்படி முழுமையாக தூர்வாரப்பட்டதால்தான் பெய்த மழைக்கு எங்கும் தண்ணீர் தேங்காத நிலை இருந்தது. சென்னை முழுவதும் கால்வாய்களை தூர்வார ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் 677 கிலோ மீட்டர் தூர் வார முடிவு செய்யப்பட்டு இதுவரை 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.331 கோடி செலவில் பணி நடைபெற்றுள்ளது.
ஒரு வார்த்தை சொன்ன உடனே எதுவும் நிறைவேறி விடாது. ஜீபூம்பா என்ற ஒரு வார்த்தை சொன்ன உடனே சென்னை, சிங்கப்பூராக மாறிவிடாது. இரண்டு வருடம் என்பது போதிய காலகட்டம் அல்ல. நிச்சயம் முதல்வர் சொன்னதைச் செய்வார். நிச்சயம் சென்னையை சிங்கப்பூர் ஆக முதல்வர் ஆக்கி காட்டுவார்” என்று சேகர்பாபு கூறினார்.