புதுடில்லி: புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் பெயரை, அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை குறிக்கும் ‘அம்ரித் மஹோத்சவ்’ -ஐ முன்னிட்டு இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதியின் துணை பத்திரிகை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு, ஜனாதிபதி மாளிகை தோட்டத்திற்கு ‘அம்ரித் உத்யன்’ என்ற பெயரை ஜனாதிபதி சூட்டியுள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது.
இந்த தோட்டம் பொது மக்களின் பார்வைக்காக வரும் ஜன.,31 முதல் மார்ச் 26 வரை திறக்கப்பட உள்ளது. வழக்கமாக இந்த பூக்கள் பூத்து குலுங்கும் பிப்., முதல் மார்ச் வரை மட்டுமே பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
ஜனாதிபதி மாளிகையின் சிறப்பு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது இந்த தோட்டம் ஆகும். செவ்வக தோட்டம், நீள தோட்டம், வட்டத்தோட்டம் என மூன்று தோற்றங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இருநூற்று ஐம்பது வகை ரோஜா செடிகளும், அறுபது வகை போகன் வில்லாக்களும், பலவித போன்சாய் வகை தாவரங்களும் உள்ளன. மொத்தம் அறுநூறு வகையான தாவரங்களைக் கொண்ட தோட்டம் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு,விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அனைத்து நாட்களிலும் அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement