தென் சீன கடல் பகுதியில் தனி தீவாக தைவான் இருக்கிறது. இதை தனது எல்லைக்குட்பட்ட பகுதியாக சீனா கூறிவருகிறது. இதனால், தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரபூர்வ உறவு வைத்துக் கொண்டால் அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என அமெரிக்கா கூறிவருகிறது. அமெரிக்கா-சீனா இடையேயான மோதல் தற்போது பொருளாதாரத்திலும் பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் பல நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க விமானப்படை ஜெனரலான மைக் மினிஹான் (Mike Minihan) நேற்று அதிகாரிகளுக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ” 2025-ம் ஆண்டு சீனாவுடன் போர் ஏற்படக்கூடும்… அதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் வீரர்கள் அனைவரும் தயார் நிலையில், இருக்க வேண்டும்.. உங்கள் இலக்கைக் குறிவைக்க தயாராகுங்கள். தைவான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் வருகிற 2024 -ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

இதனை காரணம் காட்டி அமெரிக்கா திசை திசைதிருப்பப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் தைவானுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய கணிப்பு தவறாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் 2025-ல் சீனாவுடன் போர் செய்ய போகிறேன் என்று என் மனது சொல்கிறது. வீரர்கள் அனைவரும் பயிற்சியில் மிகவும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
ஏர் மொபிலிட்டி கிட்டதட்ட 50,000 சேவை உறுப்பினர்களையும், 500 விமானங்களையும் கொண்டு இயங்குகிறது. அவை போக்குவரத்து மற்றும் எரிபொருள் நிரப்புதலுக்கு பொறுப்பு வகிக்கிறது. இது தொடர்பான கையொப்பமிடப்பட்ட குறிப்பேடு, ஏர் மொபிலிட்டி கமாண்டில் உள்ள அனைத்து விமானப் படைத் தளபதிகளுக்கும், பிற விமானப்படை தளபதிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேன்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏர் மொபிலிட்டி கமெண்ட் (AMC) செய்தித் தொடர்பாளர் இந்த தகவல் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.