தாம்பரம் சேலையூர், 2012-ம் ஆண்டு… பள்ளி மாணவி ஸ்ருதியின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் பேருந்தின் டிரைவர், பள்ளி தாளாளர் உட்பட எட்டுப் பேரையும் விடுதலைசெய்து உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவு ஸ்ருதியின் பெற்றோருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.
தாம்பரத்தை அடுத்த சேலையூரில் செயல்படும் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவந்தார் மாணவி ஸ்ருதி. இவர் தினமும் பேருந்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். கடந்த 2012-ம் ஆண்டு, ஜூலை 25-ம் தேதி மாணவி ஸ்ருதி பேருந்தில் பள்ளிக்குச் சென்றார். ஆனால் அவர் சடலமாகவே வீடு திரும்பினார். பேருந்தில் இருந்த ஓட்டை வழியே மாணவி ஸ்ருதி கீழே விழுந்ததில் சக்கரம் ஏறி உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மவுன்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், பேருந்தின் டிரைவர் சீமான், கிளீனராக வேலை பார்த்த 16 வயது சிறுவன், பள்ளி தாளாளர் விஜயன், அவரின் சகோதரர்கள் பால்ராஜ், ரவி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், யோகேஷ் கேப்ஸ் உரிமையாளர் யோகேஷ் சில்வேரா, பிரகாஷ் என எட்டுப் பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி காயத்ரி, கடந்த 25-ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட எட்டுப் பேரையும் அவர் விடுதலை செய்து உத்தரவிட்டார். இது, மாணவி ஸ்ருதியின் பெற்றோரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம்…
இந்த வழக்கில் முதல் எதிரியான பேருந்தின் டிரைவர் சீமான் என்பவர்மீது 279, 304(ii) IPC and 182(A) r/w 109, 190 of M.V.Act ஆகியவற்றின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருந்தனர். இரண்டாவது எதிரியாக பேருந்தில் கிளீனராக வேலை பார்த்தவன் சிறுவன். இவன் சிறுவன் என்பதால் இவர்மீதான குற்றச்சாட்டுகள் Juvenile Justice Board-க்கு மாற்றப்பட்டன. மூன்றாவது எதிரியாக பள்ளியின் தாளாளர் விஜயன்மீது 304(ii) r/w 109 IPC, 182(A)M.V.Act r/w 109 IPC, 190 of M.V.Act ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதையடுத்து அடுத்தடுத்த எதிரிகள் பால்ராஜ், பிரகாசம், ராஜசேகர் ஆகியோர்மீது 304(ii) r/w 109 IPC ஆகியவற்றின்கீழும் ரவி, யோகேஷ் சில்வரா ஆகியோர்மீது 304(ii) r/w 201, 465 IPC ஆகிய பிரிவுகளின் கீழும் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருந்தனர்.
இந்த வழக்கில் மவுன்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர், தன்னுடைய இறுதிப் புலனாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், `சம்பவத்தன்று மாலை 3.30 மணியளவில் மாணவி ஸ்ருதி பள்ளியிலிருந்து பேருந்தில் புறப்பட்டதாகவும் மாலை 4.30 மணியளவில் முடிச்சூரில் விழுந்து உயிரிழந்து விட்டதாகவும் சேகர் என்பவர் புகார் கொடுத்தார். மேலும் அந்தப் பேருந்தை சரிவர பராமரிக்காததால் அதில் ஓட்டை இருந்தது. அதனால்தான் மாணவி ஓட்டை வழியாக கீழே விழுந்தது புலன் விசாரணயில் தெரியவந்தது.
கடந்த 8.7.2012-ம் தேதி தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளராக ராஜசேகரன் என்பவர் தகுதிச் சான்றிதழ் (எஃப்.சி) கொடுத்திருக்கிறார்.இவைதான் மாணவி ஸ்ருதியின் இறப்புக்குக் காரணம். எனவே, குற்றம்சாட்டப்பட்ட எட்டுப் பேருக்கும் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக அரசு வழக்கறிஞரும் நீதிமன்ற விசாரணையின்போது கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 35 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் முதலாவது சாட்சியான சேகர் என்பவர், சம்பவத்தன்று போன் மூலம் மாணவி ஸ்ருதி மரணமடைந்த தகவல் தனக்குக் கிடைத்ததாகவும், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்ததாகவும், அப்போது பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக மாணவி ஸ்ருதி கீழே விழுந்தது தெரிந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், மாணவி ஸ்ருதியின் வீட்டுக்கு அருகில் சேகர் வசித்துவந்ததால் அவரிடமிருந்து போலீஸார் புகாரைப் பெற்றிருக்கிறார்கள். சேகர் அளித்த புகாரில் பேருந்தின் டிரைவர் சீமான் மீதும், கிளீனர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் 35-வது சாட்சியான இன்ஸ்பெக்டர் தினகரன் தன்னுடைய புலனாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு குறித்து விளக்கமளித்தார். கிருஷ்ணன், சார்லஸ், ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களில் கிருஷ்ணன் என்பவர், சம்பவத்தை, தான் நேரில் பார்க்கவில்லை என்று நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். நேரடிச் சாட்சியாக போலீஸார் ஆஜர்படுத்திய ஆட்டோ டிரைவர் சார்லஸ் என்பவர், சம்பவம் நடக்கும்போது அந்த வழியாகச் சென்றதாகவும், ஆனால் என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
போலீஸார் ஆஜர்படுத்திய நேரடி சாட்சியான (Eye Witness) ராமகிருஷ்ணன் என்பவர், தான் மெக்கானிக்காக வேலை பார்த்துவருவதாகவும், மாணவி ஸ்ருதியின் வீட்டுக்கு அருகில் வசித்துவருவதாகவும், தனக்கு இரவு 8:30 மணியளவில்தான் மாணவி ஸ்ருதி உயிரிழந்த தகவல் தெரியும் என்றும் கூறியிருக்கிறார். அதன் பிறகு நீதிமன்றத்தில் சாட்சி அளித்த அதே பேருந்தில் பயணித்த சில மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் பேருந்தில் ஓட்டை இருந்ததைத் தெளிவாகச் சொல்லவில்லை. மேலும், போலீஸார் தங்களிடம் முறையாக விசாரிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

போக்குவரத்து போலீஸ் ஏட்டு தெய்வ சிகாமணி என்பவர் அளித்த சாட்சியில், சம்பவத்தன்று தான் முடிச்சூர் ஏரியாவில் ரோந்துப் பணியில் இருந்ததாகவும், தகவல் கிடைத்ததும் பேருந்து விபத்து நடந்த இடத்துக்குச் சென்றதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது அவர், பேருந்துக்குள் ஏறிப் பார்த்தபோது அதில் ஓட்டை இருந்ததைத் தன்னுடைய செல்போனில் படம் பிடித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்தப் போட்டோக்களை புளு டூத் மூலம் ராஜேந்திரன் என்பவரின் செல்போனுக்கு அனுப்பிவைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மாணவி ஸ்ருதியின் அம்மா, அப்பா ஆகியோர் நீதிமன்றத்தில் அளித்த தகவலில் தன்னுடைய மகள் ஸ்ருதி, கடந்த 2009-ம் ஆண்டு முதல் அந்தப் பள்ளியில் படித்துவருவதாகவும், தினமும் பள்ளியின் பேருந்தில்தான் ஸ்கூலுக்குச் செல்வதாகவும் தெரிவித்தனர். தினமும் கிளீனராக வேலை செய்யும் சிறுவன்தான் தங்களுடைய மகளைப் பேருந்தில் ஏற்றிச் செல்வார் என்றும், கடந்த 25.7.2012-ம் தேதி காலை 7:30 மணியளவில் தன்னுடைய மகள் ஸ்ருதி பள்ளிக்குச் செல்வதற்கு பேருந்தில் ஏறிச் சென்றார் என்றும் கூறினர். அன்றைய தினம் மாலை 4:30 மணியளவில் ஸ்ருதி பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டதாக தங்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர் என்றும், அதன் பிறகு சடலமாகத்தான் தங்களுடைய மகளை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் 23-வது சாட்சியாக ஆஜரானவர், `என் குழந்தைகள் பிரைவேட் பேருந்தில் போவார்கள். பேருந்தின் முன் பக்கத்தில் P2 ஸ்டிக்கர் என ஓட்டியிருக்கும். இன்ஸ்பெக்டர் என்ன கேட்டாரோ அதை அப்படியே எழுதிக் கையொப்பம் போட்டேன். நீதிமன்றத்தில் 3-வது எதிரி விஜயன், 8-வது எதிரி யோகேஷ் சில்வேரா ஆகியோரைத் தெரியும்’ என்று கூறினார்.
24-வது சாட்சியாகச் சேர்க்கப்பட்டவர் கூறிய தகவலில், போலீஸார் ஒரு ஸ்டேட்மென்ட் எழுதிவைத்திருந்தார்கள். அதைப் பார்த்து எழுதிக்கொடுக்கச் சொன்னார்கள். அதில் பேருந்தில் ஓட்டை இருந்ததாகவும், அந்த விபத்தை என்னுடைய மகன் என்னிடம் சொன்னதாகவும், அந்தச் செய்தியைப் பேருந்தின் டிரைவரிடம் சொன்னதாகவும், பள்ளிக்குச் சென்று ஓனரிடம் இந்த விவரத்தைச் சொன்னதாகவும் எழுதப்பட்டிருந்தது. `அப்படி இல்லையே…’ என்று நான் சொன்னேன். `ஒன்றும் ஆகாது. எழுதிக் கொடுங்கள்’ என்று சொன்னார்கள். பேனா, பேப்பர் கொடுத்தார்கள். நான் அதைப் பார்த்து எழுதி, கையொப்பமிட்டு கொடுத்தேன். நீதிமன்றத்தில் பிரின்சிபல், யோகேஷ் சில்வேரா ஆகியோரைத் தெரியும் என்று கூறினேன்’ என்று நீதிமன்றத்தில் விசாரணையின்போது தெரிவித்தார்.
7-வது சாட்சியாக சேர்க்கப்பட்ட மாணவர் ஒருவர் அளித்த தகவலில், `ஜூலை மாதம் 2012-ல் ஒருநாள் அந்தப் பேருந்தில் ஓட்டை இருந்தது எனக்குத் தெரியும். இந்த விவரத்தை என் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. மாணவி ஸ்ருதி இறங்குவதற்கு முன்பே நான் இறங்கிவிட்டேன். பின்னர் என் அம்மாவிடம் ஒரு மாணவிக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது நியூஸ் வைத்து பாருங்கள் என்று சொன்னேன்’ என்று கூறியிருந்தார்.
29-வது சாட்சியாகச் சேர்க்கப்பட்டவர், `ஆய்வின்போது வாகனம் முழுவதும் எரிந்துவிட்ட நிலையில் இருந்ததால், வாகனத்தின் அசல் ஆவணத்தை ஒப்பிட்டு தொடர்ந்து ஆய்வுசெய்தேன்’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். 9-வது சாட்சியாக சேர்க்கப்பட்டவர், `நீதிமன்றத்தில் அளித்த தகவலில், எரிந்திருந்த பேருந்தில் ஏறி செல்போனில் நான் எடுத்த புகைப்படங்கள்’ என்று கூறியிருக்கிறார்.
8-வது சாட்சியாகச் சேர்க்கப்பட்டவர், `ஸ்ருதி இறந்த இடத்துக்கு உடனடியாகப் போக முடியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து சென்றேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் 8-வது சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர், நோக்கியா 3100 என்ற மாடல் செல்போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த செல்போனில் கேமரா வசதியே இல்லை என கூகுளில் தேடியபோது தகவல் கிடைத்திருக்கிறது.
27-வது சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர், “சம்பவத்தன்று முடிச்சூர் சாலையில் சிறுமி ஒருவர் பேருந்தில் அடிப்பட்டு இறந்ததாக போன் மூலம் எனக்குத் தகவல் தெரிவித்தார்கள். அருகில் இருந்தவர்களை விசாரித்தபோது ஓட்டை வழியாகப் பள்ளி மாணவி கீழே விழுந்து இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். நான் பேருந்தின் உள்ளே சென்று பார்த்தபோது நான்கு நபர்கள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் பேருந்தை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பேருந்தின் 5-வது சீட்டுக்கும் 6-வது சீட்டுக்கும் இடையே ஒரு ஓட்டை இருந்தது. அதை நான் படம் எடுத்தேன். புகைப்படம் எடுத்ததும், என்னைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டவர்கள், மீண்டும் பேருந்தைச் சேதப்படுத்திவிட்டு அதை எரித்துவிட்டார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக எடுத்த போட்டோ அடங்கிய செல்போனை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.
ஃபைனான்ஸியர் மகாவீர் என்பவர் நீதிமன்றத்தில் அளித்த தகவலில், `நான் வாகனங்களுக்கு ஃபைனான்ஸ் செய்துவருகிறேன். யோகேஷை எனக்குத் தெரியும். TN 23 S 9952 என்ற பேருந்துக்கு நான் 6,10,000 ரூபாய் ஃபைனான்ஸ் செய்தேன். சில மாதங்களுக்குப் பிறகு பேருந்தின் ஆர்சி புக் பள்ளியின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு, அதை யோகேஷ் என்னிடம் கொடுத்தார். `பள்ளியின் பெயரில் ஏன் ஆர்சி புக் இருக்கிறது?’ என்று யோகேஷிடம் நான் கேட்டேன். அதன் பிறகு யோகேஷ் டி.ஓ ஃபார்மை என்னிடம் கொடுத்தார். 25.7.2012-ம் தேதி நான் ஃபைனான்ஸ் கொடுத்த பேருந்து விபத்துக்குள்ளானதாக யோகேஷ் என்னிடம் தெரிவித்தார். 10.10.2012-ம் தேதி பல்லாவரம் டிராஃபிக் போலீஸாரிடம் பேருந்து தொடர்பான ஆர்.சி புக் உள்ளிட்ட ஆவணங்களையும் நான் கொடுத்தேன். அப்போது யோகேஷ் என்னுடன் இருந்தார். பொதுவாக, ஒருவர் ஃபைனான்ஸ் செய்ய வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட வாகனம் யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் அந்த வாகனம் தொடர்பாக ஃபைனான்ஸ் கேட்டு விண்ணப்பிக்க முடியும்’ என்று தெரிவித்திருந்தார். இதே விவரங்களை பேருந்தின் உரிமையாளர் யோகேஷ் என்பவரும் தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியிருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யோகேஷ் சில்வேராவின் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
18-வது சாட்சியாக ஆஜரானவர், `குறுக்கு விசாரணையின்போது யோகேஷ் சில்வேராதான் மாதத் தவணைத் தொகையைப் பேருந்துக்கு செலுத்தினார். வரிவிலக்கு பெறுவதற்கு யோகேஷ் சிலவேரா பள்ளிக்குத் தெரியாமலேயே மோட்டார் வாகன அலுவலகத்தில் தவறாக ஆர்.சி புக்கை மாற்றியது எனக்குத் தெரியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜர்படுத்த சாட்சிகளில் ஒருவரான ஐடிபிஐ வங்கியின் கிளை மேலாளர் இளவழகன், என்பவர் நீதிமன்றத்தில், யோகேஷ் சில்வரா என்பவர், விபத்துக்குள்ளான பேருந்துக்குத் தங்கள் வங்கி மூலம் இன்ஷூரன்ஸ், சாலை வரி ஆகியவற்றைச் செலுத்தியதாகத் தெரிவித்தார். அடுத்து யோகேஷ் கேப் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் அன்பரசன் என்பவர், `விபத்துக்குள்ளான பேருந்து, பள்ளி நிர்வாகத்துக்குரியதல்ல. ஆனால், அந்தப் பேருந்தில் மாணவி ஸ்ருதி படிக்கும் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், இன்னும் சில பள்ளி மாணவர்களும் ஸ்கூலுக்குச் செல்வார்கள்’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சாட்சிகள், விவாதங்கள் அடிப்படையில் நீதிபதி காயத்ரி, தன்னுடைய தீர்ப்பில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை நிரூபிக்க காவல்துறை தவறிவிட்டது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. எனவே, சீமான்மீது பதிவுசெய்யப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகள் நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர் குற்றவாளி இல்லை. பள்ளி தாளாளர் விஜயனுக்கும் விபத்துக்குள்ளான பேருந்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் கைதான யோகேஷ், தன்னுடைய பேருந்தை தனியார் பள்ளியின் பெயரில் பதிவு செய்திருப்பது குறித்து விஜயனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறார். விபத்துக்குள்ளான பேருந்தின் ஆர்.சி புத்தகத்தில் ஓனரின் புகைப்படம் ஒட்டப்படவில்லை. அந்தப் பேருந்தின் ஆவணத்தில் பள்ளித்தாளாளர் விஜயனின் கையெழுத்தும் இல்லை என அரசு தடயவியல் அதிகாரி தாமரைச் செல்வன் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். எனவே மூன்றாவது எதிரி விஜயன்மீது பதிவுசெய்யப்பட்ட சட்டபிரிவுகளும் நிரூபிக்கப்படாததால் அவரும் குற்றவாளி இல்லை. பள்ளிகளுக்கு வழங்கும் சலுகையை பெறவே பேருந்தின் உரிமையாளர் யோகேஷ், ஆர்.டி.ஓ அதிகாரிகளின் உதவியோடு தனியார் பள்ளியின் பெயரில் பேருந்தை பதிவு செய்து அரசுகு வரி இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதைப்போல மற்ற எதிரிகளின் மீதான குற்றச்சாட்டுகளும நிரூபிக்கப்படவில்லை” எனக் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் மாணவி ஸ்ருதியின் உயிரிழப்புக்கு யார்தான் காரணம் என்பதை காவல்துறை கண்டுபிடிக்குமா?