மதுரையில், தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர கட்டுமானத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என, உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொழிலாளர் துறை உதவி கமிஷனர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் திறன், ஒருவாரம் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து 3 ஆண்டுகள் பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் இதில் பங்கேற்கலாம். தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும். 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2, ஐடிஐ படித்த, 18 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி முடித்தவர்களுக்கு எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க உறுதி செய்துள்ளது. கொத்தனார், பற்ற வைப்பாளர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பன்டரி, பார்பென்டிங் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சிகள் தையூர் கட்டுமான கழக பயிற்சி மையம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம், தமிழ்நாடு கட்டுமான கழகம் ஆகியவற்றில் நடக்கும். பங்கேற்போருக்கு தினமும் ரூ.800 ஊக்கத் தொகை வழங்கப்படும். தகுதியுள்ள தொழிலாளர்கள் நலவாரிய அட்டை, கல்விச் சான்று, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக் நகல்களுடன் மதுரை எல்லீஸ்நகர் வீட்டுவசதி வாரிய வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.