ஆகம மீறலா… சமூகநீதி செயலா… பழனி கோயிலில் நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் (ஜன. 27) நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் மேற்கொண்ட நிலையில், கும்பாபிஷேகம் நடப்பதற்கு முந்தைய நாளான ஜனவரி 26ஆம்தேதி அன்று மாலை மூலவர் சிலை அமைந்துள்ள கருவறைக்குள் சிலர் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும்‌ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் அதிக பரப்பப்பட்டு வருகிறது. பழனி மலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் குறித்த தேதி அறிவிக்கப்பட்டவுடன், பழனி கோவிலில் அமைந்துள்ள நவபாஷாண சிலையை பாதுகாக்கும் வகையில்‌, ஓய்வு பெற்ற நீதியரசர் பொங்கிலியப்பன் தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை சிரவை ஆதினம், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை  ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, பழனி கோவில் குருக்கள் கும்பேஸ்வரர், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், பழனி நகர் மன்றத்தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 15 பேர் கொண்ட  குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

இந்த குழுவானது பழனி கோவில் கருவறை மற்றும் மூலஸ்தானத்தில் செய்யவேண்டிய பணிகள் மற்றும் நவபாஷாண முருகனின்‌ திருமேனியை பாதுகாக்கும் வகையில் பணிகள் குறித்தும், ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது. 

கும்பாபிஷேகம் தொடர்பாக சிலை பாதுகாப்பு குழுவினர் பலமுறை மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். இதைத்தொடர்ந்து  கும்பாபிஷேகம் பணிகள் நிறைவடைந்து நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகமும் நிறைவடைந்தது. கும்பாபிஷேகம் நடப்பதற்கு முந்தைய நாளான கடந்த 26ம்தேதி வியாழக்கிழமை இரவு  சிலை பாதுகாப்பு கமிட்டியை சேராத சிலர் கோவில் கருவறைக்குள்‌ சென்று வந்ததாக கூறி பக்தர்கள் வாக்குவாதம் செய்வதாக கூறப்படும் வீடியோதான் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் பழனி கோவில் கருவறை நுழையும் வாசற்படியில் அமைச்சர் சேகர்பாபு சட்டை அணியாமல் நிற்பதும், உள்ளே குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சிலர் நிற்பதும் தெரிகிறது‌. தொடர்ந்து மற்றொரு வீடியோவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் சிலர் வெளியே வருவதும் தெரிகிறது. 

இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோரிடம் பக்தர்கள் சிலர் வாக்குவாதம் செய்வதும், தொடர்ந்து நீங்கள் செய்வது தவறு என்றும், இதுவரை பழனி கோவில் வரலாற்றில் நடக்காத சம்பவங்கள் அனைத்தையும் ஆகமவிதியை மீறி செய்கிறீர்கள்  என்றும், இதை பழனியாண்டவன் பொறுத்துக்கொள்ள மாட்டான் என்றும்‌ ஆவேசமாக கத்தி கோஷமிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. 

தொடர்ந்து கருவறை முன்பு,’நீதிபதிகளை எதற்கு அழைத்து வந்துள்ளீர்கள், முருகன் என்ன காட்சிப்பொருளா?’ என்றும்‌, அவர்களுடன்‌ வந்த பழனி கோவில் அர்ச்சகர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்து சாபம் விடுவதுமாக முடிகிறது, வீடியோ. ஆகம விதியை அமைச்சர்கள் மீறினார்களா அல்லது சமூக நீதியை வலியுறுத்தும் வகையில் அமைச்சர் செயல்பட்டரா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.