மதுரை | மின்சாதன கழிவுகளை மறுசுழற்சிக்காக சேகரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்பு

மதுரை: மின் சாதன கழிவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றை மறு சுழற்சி செய்யும் பணிகளை மதுரையைச் சேர்ந்த லயன்ஸ் சங்கங்களும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் இணைந்து தொடங்கி உள்ளன.

உலகளாகவிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக மின்னணு கழிவுகள் தற்போது உருவெடுத்துள்ளன. மின் சாதனப் பொருட்கள், செயல் தன்மையை இழந்ததும் அவை குப்பையில் தூக்கி எறியப்படுகிறது. பூமிக்கு கேடு விளைவிக்கும் இந்த மின் சாதன கழிவுகளை பாதுகாப்பாக மறு சுழற்சி செய்யவும், அழிக்கவும் மதுரையை சேர்ந்த லயன்ஸ் சங்கங்களும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்கானப் பணிகள் தொடங்கிய ஒரு வாரத்திற்குள் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 1/2 டன் மின் கழிவுகளை பெற்றுள்ளதாக மதுரை லயன்ஸ் சங்க ஆளுநர் டி.பி. ரவீந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ‘‘மின்கழிவு விழிப்புணர்வை ஒரு இயக்கமாக முன்னெடுத்துள்ளோம். லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பிப்., 3ம் தேதி முதல் ஒரு வாரம் மின் கழிவுகள் பிரச்சாரத்தையும், சேகரிக்கும் நிகழ்ச்சிகளையும் முன்டுக்க உள்ளனர்.

செல்போன், கணினி, குளிர்சாதனப் பெட்டி, தொலைகாட்சி போன்ற அனைத்து மின் மற்றும் மின்னணு சாதனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அவை குப்பைகளாக மாறுகின்றன. ஆண்டுதோறும் இந்த உலகம் 40 மில்லியன் டன் மின் கழிவுகளை உருவாக்குகிறது. இதில், 15 சதவீதம் மின் கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. 85 சதவீத மின் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படாத நிலையில், சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது.

மின் கழிவுகளில் பாதரசம், ஈயம், காட்மியம், பாலிப்ரோமினேட்டட் ஃப்ளேம் ரிடார்ட்கள், பேரியம் மற்றும் லித்தியம் போன்ற ஆரோக்கியத்திற்கு ஆபத்தான நச்சு கூறுகள் உள்ளன. இவை, மனிதர்களின் மூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு பெறாவிட்டால் எதிர்கால தலைமுறையினர் வாழ்வதற்கு இந்த பூமி தகுதியில்லாததாகிவிடும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.