அனைத்து சமூகத்துக்கும் அதிகாரம் வழங்க தீவிரம் – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: ‘‘நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் வழங்க மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ தேவ்நாராயண் அவதரித்த 1111-ம் ஆண்டு விழா மலசேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நேற்று நடைபெற்றது. குர்ஜாத் சமூகத்தை சேர்ந்த இவரை, ராஜஸ்தான், ம.பி.யின் சில பகுதிகள், குஜராத் போன்ற மாநிலங்களில் கடவுளாக வழிபடுகின்றனர். அவரது ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி மலசேரி மாவட்டத்துக்கு வந்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூக அதிகாரம் என்பது இந்தியாவின் பயணத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் சமூக அதிகாரம் வழங்குவதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக அதிகாரம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட, நலிவடைந்த ஒவ்வொரு சமூகத்துக்கும் அதிகாரம் வழங்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதையே தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்தியா என்பது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சாதாரண நாடு அல்ல. நமது நாகரிகம், கலாச்சாரம், மத நல்லிணக்கம், திறமை இவை அனைத்தும் உள்ளடங்கியதுதான் இந்தியா. நமது பாரம்பரியத்தை நினைத்து நாம் பெருமைப்படலாம். அடிமைத்தனமான மனநிலையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கான நமது கடமையை நினைவுகூர வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.