திருப்பூர் மாநகரத்தில் 200க்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன; இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அனுப்பர்பாளையம் வேலம்பாளையம் திலகர் நகரிலும் பனியன் ஆலையில் தமிழக தொழிலாளர் ஒருவரை, 100க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பெல்ட், கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு விரட்டி அடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இது குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பேக்கரியில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த வடமாநில தொழிலாருக்கும், தமிழக தொழிலாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பிற வடமாநிலத்தவர்களிடம் இது குறித்து சொல்ல மோதல் வெடித்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரபல காமெடியன் மதுரை முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், “ வட இந்திய தொழிலாளர்கள் 100 பேர் பெல்ட், கத்தி, மரக்கட்டை ஆகியவற்றை வைத்துக்கொண்டு தமிழக தொழிலாளரை விரட்டும் வீடியோவை பார்த்தேன். லேசாக வேலை கேட்டு வந்தார்கள்; பின்னர் தமிழகத்தில் 10 சதவீதமாக அதிகரித்தார்கள்; ஆனால் திருப்பூரில் தற்போது வடமாநிலத்தவர்கள் 65 சதவீதமாக மாறியிருக்கிறார்கள்.
தமிழர்கள் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு, சொந்த ஊருக்கு வந்து விட்டீர்கள். இப்போது குடியேற வந்தவர்கள் விரட்டி அடிக்கும் அளவிற்கு நீங்கள் விழிப்புணர்வாக இருக்கிறீர்கள் பாருங்கள். நீங்கள் பால் அபிஷேகம் செய்கிறீர்கள்; ஆனால் அவன் இன்னும் கொஞ்சம் நாளில் உங்களுக்கு பால் ஊத்திவிட்டு போகப்போகிறான். வேலை வாய்ப்பு இல்லாமல் இப்படியே போய்க்கொண்டிருந்தால், தமிழ் நாட்டு இளைஞர்கள் பிச்சை எடுக்க போவது உறுதி. ஊர்களில் ஜாதி பெயர்களில் பல தெருக்கள் உள்ளன; ஆனால் இனிமேல் வடக்கன் தெருதான் வரப்போகிறது. இதனை ரொம்ப லேசான வீடியோவாக நினைக்க வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும். “ என்று அதில் அவர் பேசியுள்ளார்.