ஈரோடு கிழக்கு அதிமுக இடைத்தேர்தல் முடிவுகள்; அதிரப் போகும் டெல்லி- செங்கோட்டையன் பரபர!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்குழு தலைவரும், எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன் பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அமைதியான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கை அடைய அயராது பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இரண்டு முறை ஆலோசனை

எங்களின் களப்பணி என்பது வரலாறு காணாத அளவிற்கு அமையவுள்ளது. இதுதொடர்பாக கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டு முறை நேரில் அழைத்து பேசி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். ஒவ்வொரு கருத்தையும் உள்வாங்கிக் கொண்டு தேர்தல் பணிகளையும் சீரோடும், சிறப்போடும் மேற்கொண்டு வருகிறோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

எனவே வெற்றியை எளிதில் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தலானது செங்கோட்டையே வியக்கத்தக்க அளவிற்கு அமையப் போகிறது. ஏனெனில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் தான் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் செங்கோட்டையில் நிச்சயம் எதிரொலிக்கும். திருப்பு முனையாக இருக்கும்.

வேட்பாளர் யார்?

மக்களோடு நின்று பணிகளை ஆற்றி வருகிறோம். வெற்றி என்பது எங்கள் லட்சியத்தின் இலக்காக உள்ளது. விரைவில் அதிமுக ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு வேட்பாளர் யார் என்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். அதிமுக ஆட்சி மன்ற குழுவை பொறுத்தவரை மொத்தம் 8 பேர் இருந்தனர்.

ஆட்சி மன்ற குழு கூட்டம்

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எண்ணிக்கை 6ஆக குறைந்துள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்.பி வேணுகோபால், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் அடங்குவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வேட்பாளர் தேர்வு குறித்து இந்த குழு தான் முடிவு செய்யவுள்ளது. வரும் 30ஆம் தேதி திங்கட்கிழமை அல்லது 31ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று அதிமுக மன்ற ஆட்சிக் குழு நடைபெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்திற்கு பின்னர் அதிமுக வேட்பாளர் யார் என்று எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

காத்திருக்கும் சிக்கல்

முன்னதாக பாஜகவின் ஆதரவை எடப்பாடி அணியினர் நாடியிருந்தனர். உடனே ஓபிஎஸ் தரப்பும் சென்று ஆதரவை கேட்டது. ஆனால் யாருக்கு ஆதரவு என்பதை பாஜக இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே அவர்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாம் தேர்தல் வேலைகளை பார்ப்போம் என எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்தகட்டமாக இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு நாளைய தினம் முறையீடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.