கிராமசபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவது வழக்கம். அந்தவகையில், மரபணு மாற்றப்பட்ட கடுகு மற்றும் செரிவூட்டப்பட்ட அரிசி போன்ற அரசின் திட்டங்களுக்கு எதிராக, சீர்காழி அருகே நிம்மேலி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நிம்மேலி ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில், “உணவில் மருந்தை ஒருபோதும் கலக்ககூடாது. அது, விவசாயத்திற்கும், இம்மண்ணில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். இத்திட்டம் முறையான ஆய்வுகளின்றி, மக்களிடம் கருத்துகேட்பு நடத்தாமல் வலுகட்டாயமாக திணிப்பதாக உள்ளது. இத்திட்டத்தினை தடை செய்ய வேண்டும்.
இதில் கலக்கப்படும் சத்துகள், முருங்கை கீரை, சிறுதானியங்கள் மற்றும் தீட்டாத மரபு ரக அரசிகளில் மிக எளிமையாக உள்ளூரிலே கிடைக்கிறது. செயற்கை சத்துகள் நம் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அனைவரும் உண்ண வேண்டும் என்பது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மருத்துவ வல்லுனர்களே தெரிவித்துள்ளனர். ஆகையால் கிராம சபைக் கூட்டத் தீர்மானத்தில் செயற்கை இரும்புச் சத்து திணிக்கப்பட்ட செயற்கை செறிவூட்டபட்ட அரிசியை அனுமதி வேண்டாம், மரபணு மாற்றுக் கடுகிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

ஊரட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வனிதா, கிராம நிர்வாக அலுவலர் திம்மராசு, சமூக ஆர்வலர் இயற்கை விவசாயி நலம் சுதாகர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.