சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்று, தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணையின்போது, யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறியதாவது: இந்த வழக்கில் எங்களுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீஸார் உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. கோகுல்ராஜ் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்த பிறகும், பயன்பாட்டில் இருந்துள்ளது.
அதேபோல, தங்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்களையும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பதிவான வீடியோ ஹார்டுடிஸ்க் போன்றவற்றை ஆய்வு செய்வதிலும், நீதிமன்றத்தில் ஒப்படைப்பதிலும் போலீஸார் உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.
குறிப்பாக, ஹார்டுடிஸ்கில் இருந்த பதிவுகளைக் கையாண்டது யார்? அவற்றில் இருந்த தகவல்களை எடிட் செய்தது யார்? அதில் உள்ள பதிவுகளை அழித்தது யார் போன்ற விவரங்களை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை.
சாட்சிகளும் முறையாக விசாரிக்கப்பட வில்லை. இது தொடர்பாக சிசிடிவி-க்களை இயக்கும் கண்காணிப்பாளரிடமும் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப். 3-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.