சென்னை: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் உர்பேசர் ஸ்மித் நிறுவனம் ஈடுபடுகிறது. இந்த நிறுவனம் குப்பைகளை அகற்றுதல், பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.
இந்தப் பணிகளை கண்காணிக்க ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக தினசரி மேற்கொள்ளப்படும் பணிகள் நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்படுகிறது. இந்த மையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு இன்று (ஜன.29) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, தலைமை பொறியாளர் மசேகன் ஆகியோர் உடன் இருந்தனர்.