“திமுக, அதிமுக அதிருப்தி வாக்குகள் எங்களுக்கே கிடைக்கும்!" – அமமுக சண்முகவேலு நம்பிக்கை

டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.ம.மு.க-வின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, திருப்பூர் முன்னாள் மேயர் விசாலாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின் அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் பணிக்குழுவின் பொறுப்பாளருமான உடுமலை சண்முகவேலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் சிவபிரசாந்த்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வது குறித்தும், அவரின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வது குறித்தும் தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம்

எங்களது வேட்பாளர் படித்தவர், பண்பாளர், இளைஞர். இவரது வெற்றிக்காக தீவிரமாகப் பாடுபட வேண்டும் என்ற எங்களது பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் உத்தரவை ஏற்று நாங்கள் தேர்தல் பணியாற்றவிருக்கிறோம். இந்தத் தொகுதியில் எங்களது வெற்றி உறுதிபடுத்தப்பட்டுவிட்டது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்மீதும், தற்போதைய தி.மு.க ஆட்சியின்மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். மக்களின் தேவையறிந்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற இரண்டு அரசுகளும் தவறிவிட்டன. இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே, தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் எங்களுக்கே கிடைக்கும்.

வேட்பாளர் சிவபிரசாந்த்

ஏனெனில் எங்களது குக்கர் சின்னம் மக்கள் மத்தியில் பரிட்சயமான சின்னமாக இருக்கிறது. எனவே இதனை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றியைக் கைப்பற்றுவோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.