மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்ற வலியுறுத்தி பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மதுரையில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு தெரிவித்தும், ஜி-20 மாநாட்டின் தலைவராக பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த உலக தலைவருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்றும், மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயரையும், கோரி பாளையத்தின் பெயரை அழகர் பாளையம் என்றும் மாற்றி பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை அமைத்துக் கொடுத்த வாஜ்பாய்க்கு மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிரதமர் படத்துடன் கூடிய கல்வெட்டை வைக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், பொதுவழியை ஆக்கிரமித்துள்ள துணை மேயரை கண்டித்தும், மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.