கட்டுப்பாட்டை இழந்தது
மும்பை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நைகாவ் ரெயில் நிலையம் பிளாட்பாரம் நம்பர் 1-ல் லிப்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக ஹைட்ரா கிரேன் பயன்படுத்தப்பட்டது. கிரேனை கமலேஷ் யாதவ் என்பவர் இயக்கினார். நள்ளிரவு 12.55 மணி அளவில் ரெயில் நிலையத்திற்கு வந்த திருநங்கை ஒருவர் கமலேஷ் யாதவ் மீது கல் வீசி தாக்கியதாக தெரிகிறது. அந்த கல் கமலேஷ் யாதவின் கைவிரலில் பட்டு காயமடைந்தார். இதனால் கிரேன் கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரம் நோக்கி சென்றது.
ரெயில் மீது மோதியது
அப்போது சர்ச்கேட்டில் இருந்து விரார் நோக்கி வந்த மின்சார ரெயிலின் முன்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கிரேன் மோதியது.இதில் கிரேனின் முன்பகுதியில் இருந்த உலோக கொக்கி மோட்டார் மேன் அறையில் இருந்த கண்ணாடியை உடைத்து கொண்டு சென்றது. இதில் ரெயிலை ஓட்டி வந்த மோட்டார் மேன் முகமது அப்சல் தலையில் பலத்த காயமடைந்தார். இதனால் மின்சார ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
மோட்டார் மேன் காயம்
தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் காயமடைந்த மோட்டார் மேன் முகமது அப்சலை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர். இதன் காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு பயணிகளை நைகாவ் ரெயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். பின்னர் ரெயில் விரார் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து வசாய் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கிரேன் டிரைவர் மீது திருநங்கை கல்வீசி தாக்குதல் நடத்த காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.