மேட்டூர் அணை: கேட்டை மூடிய அதிகாரிகள்… தண்ணீர் இனிமே அவ்வளவு தான்!

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை மிகவும் புகழ் வாய்ந்தது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும்.

கடந்த ஆண்டு எப்படி?

அதேசமயம் மழையின் அளவை பொறுத்து நீர் திறப்பில் மாற்றம் ஏற்படும். வழக்கமாக குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசன பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறையும். கடந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து ஆகியவை திருப்திகரமாக இருந்தது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இதனால் டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறித்த நாளான ஜூன் 12ஆம் தேதி முன்னதாக, மே மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று போக சாகுபடி நிறைவடைந்த காரணத்தால் 249 நாட்களுக்கு பின்னர், நேற்று (ஜனவரி 28) மாலை 6 மணியுடன் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பருவமழை நிலவரம்

நடப்பு நீர்ப் பாசன ஆண்டில் பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு 670 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. அணையில் இருந்து 687 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டது. அதில் காவிரி டெல்டா பாசனத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 8.40 டிஎம்சி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெள்ளநீர் 472 டி.எம்.சி வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணை நீர்மட்டம்

வழக்கத்தை விட டெல்டா பாசனத்திற்கு 19 நாட்கள் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 1959ஆம் ஆண்டு தொடர்ந்து 101 நாட்கள் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அதன்பிறகு நடப்பாண்டில் தான் அதிகபட்சமாக 136 நாட்கள் வரை நீர்மட்டம் 120 அடியாக இருந்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

வரலாற்று பின்னணி

நடப்பு நீர்ப் பாசன ஆண்டில் நேற்று வரை மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 200 நாட்கள் 100 அடியை குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணை கர்னல் டபுள்யூ எம் எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின் படி கட்டப்பட்டது. இதற்காக 1925 முதல் 1934 வரை கால அவகாசம் ஆனது. அந்த காலகட்டத்தில் உலகின் உயரமான நேர்க்கோட்டில் அமைந்த அணை என்ற பெருமையை பெற்றது.

நீர் மின்சாரம்

பாசன வசதி, விவசாயம், குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி மின்சாரம் தயாரிக்கவும் உதவுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட், 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.