திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆரணி நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் சாதியின் அடிப்படையில் திட்டி உள்ளார்.
இதனால் கடந்த ஜனவரி 8ம் தேதி இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட பாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த விசிக பிரமுகரை அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசிக நிர்வாகிகள் காரில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த ஊர்வலம் ஆரணி நகர காவல் நிலையம் அருகே வந்ததும் காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் பேசி கோஷம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் ஊர்வலத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர் உட்பட 50க்கும் மேற்பட்ட விசிக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த கைது நடவடிக்கையில் தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமறைவாக உள்ளார்.
ஏற்கனவே காவல் ஆய்வாளரை சாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் நேற்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் இன்று காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பாஸ்கர் போலீஸ் வலையில் சிக்காமல் பதுங்கியுள்ளார். பதுங்கி இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை பிடிக்கும் முனைப்பில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.