சேலம் திமுகவில் அதிரடி நீக்கம்… சிக்கிய ஒன்றிய செயலாளர் மாணிக்கம்!

சேலம் கிழக்கு மாவட்டம் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த கழக செயலாளர் டி.மாணிக்கம். இவர் பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் திருமலைகிரி பகுதியில் கோயிலுக்குள் சென்ற தலித் இளைஞரை டி.மாணிக்கம் கடுமையாக திட்டியுள்ளார். உனக்கு யார் இவ்வளவு தைரியம் கொடுத்தது? உன் பல்லை உடைத்து விடுவேன்.

திமுக பிரமுகர் செயல்

நீ என்ன பெரிய புத்திசாலினு நினைத்தாயா? மற்றவர்கள் யாரும் இங்கு நன்றாக வாழ வேண்டும் என விரும்பவில்லையா? உன்னை யார் கோயிலுக்கு செல்ல சொன்னது? என சரமாரியாக கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது. அந்த இளைஞரின் செயலால் கோயிலுக்குள் செல்ல ஊர் மக்கள் யாரும் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பெரிதும் வைரலானது.

கோயிலில் நடந்தது என்ன?

இந்த சம்பவம் கடந்த 19ஆம் தேதி நடந்ததாக சொல்லப்படுகிறது. அப்பகுதியில் உள்ள கோயிலை வன்னியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் நிர்வகித்து வருகின்றனர். இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்த கோயிலுக்குள் சென்ற தலித் இளைஞரை மிரட்டி சர்ச்சையில் சிக்கிய சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி.மாணிக்கம் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக நடவடிக்கை

இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய டி.மாணிக்கம், சமூக வலைதளங்களில் தவறான தகவலை பதிவிட்டு வருகின்றனர்.

மாணிக்கம் விளக்கம்

இதை அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்கின்றனர். திருமலைகிரி மாரியம்மன் கோயிலில் வாலிபர் ஒருவர் மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்தார். இந்த விஷயம் தொடர்பாக அந்த சமூக மக்கள் என்னிடம் வந்தனர். அப்போது அந்த வாலிபர் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வந்தார். மன்னிப்பு எதுவும் கேட்க வேண்டாம்.

மக்கள் ஆதரவு

அனைத்து சமூக மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் மது அருந்தி விட்டு வந்து ஊர் மக்களின் நிம்மதியை ஏன் கெடுக்கிறீர்கள்? அப்போது சில வார்த்தைகளை விட்டேன். அதை எனக்காக பேசவில்லை. அந்த வாலிபரை திருத்துவதற்காக பேசினேன். அனைத்து சமூக மக்களும் எனக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

பரவும் வதந்தி

இதனால் வாலிபரின் பிரச்சினையை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி முதல்வர் வரை கொண்டு சென்றுள்ளனர். எனக்கு வேண்டாத நபர்கள் செய்யும் வேலை தான் இது. மற்றபடி நான் எந்த தவறும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.