பெண்களின் கால்களுக்கு நடுவே குடும்ப கெளரவத்தை தேடாதீங்க -அடித்துச் சொல்லிய "அயலி"

Ayali On Zee 5: குடும்ப கெளரவம், ஊர் கட்டுப்பாடு, ஊர் பாரம்பரியம் என பலவற்றால் பெண்கள் படும் பாட்டை அடித்துப் பேசிவிட்டாள் அயலி. கடந்த வாரம் ஜீ 5 ஓடிடியில் வெளியான அயலி 1990-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்டுள்ளது. ஆனால் இன்றளவும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தான் வேதனை.

டாக்டர் கனவோடு சுற்றித்திரியும் நாயகி தமிழ்ச்செல்வி தான் வயதுக்கு வந்ததை மறைக்கிறார். ஆனால் அம்மா அதை கண்டுபிடிக்கவே, எனக்கு நீ தான் அயலி என செண்டிமெண்ட்டாக பேசி சமாதானம் செய்கிறார். அயலிக்கு ஒரு அறிமுகத்தை ஆரம்பத்திலேயே கொடுத்துவிடுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பெண் குழந்தைகள் மட்டும் சென்று வணங்கும் அயலி கோவில் தான் அவர்களின் குலதெய்வ கோவில். யாரோ ஒரு பெண் ஊரைவிட்டு காதலனுடன் ஓட, கோபப்பட்ட அயலி ஊரையே எரித்துவிடுகிறாள். இதனால் அன்று முதல் ஊரே ஒன்றுகூடி ஒரு முடிவெடுக்கிறார்கள். இனி இந்த ஊரில் வயதுக்கு வரும் பெண்களுக்கு அடுத்த சில மாதங்களிலேயே திருமணம் செய்துவிட வேண்டும் மற்றும் அவர்களை அதன்பிறகு பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்பது தான் அந்த முடிவு. 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் அந்த நடைமுறை இருந்ததாக சொல்கிறார்கள். அதை 1990-களில் கூட பின்பற்றுகிறார்கள். இப்படிப்பட்ட ஊரில் டாக்டர் கனவோடு 9-ம் வகுப்பு படிக்கும் நாயகி வயதுக்கு வருகிறார். அதன்பிறகு எப்படி போராடி டாக்டர் ஆனார் என்பது தான் கதை. அதற்குள் நாம் செல்ல வேண்டாம்.

ஆனால் இந்த வெப் சீரீஸில் பல ஆழமான கருத்துக்களை போரப்போக்கில் மண்டையில் அடித்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறது. சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதால் குழந்தைப்பேறின் போது அவர்கள் இறப்பது, இளம் கைம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பது என பல இன்னல்களுக்கு பெண் குழந்தைகள் ஆளாகின்றனர். ஒரு காட்சியில் 14 வயதில் திருமணம் முடிந்த நாயகியின் தோழி கணவனை இழந்து நிற்கும் போது ஊரார் அவரை ஏதோ சடங்கு செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அப்போது அந்த 15 வயது பெண், கணவனின் உடலை பார்த்துவிட்டு அழுது கொண்டே, அம்மா என்ன செய்யணும் சொல்லுமா? என கேட்டு நிற்க, அந்த அம்மா போங்கடா நீங்களும் உங்க சடங்கும் என்பது போல, பெண்ணின் கையில் இருந்த சொம்பை தட்டிவிட்டு மகளை கட்டி அணைக்கிறார். கணவன் இறந்த பிறகு அந்த பெண் வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக தான் அந்த சடங்காம்.

அதேபோல மற்றொரு வீட்டில் 14 வயதில் திருமணம் நடந்து அடுத்த 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பதால், கணவன் இரண்டாம் திருமணம் செய்ய தயாராகிறார். வேறொருத்தி வந்து தன் மகளை கொடுமை படுத்தினால் என்ன செய்வது என நினைத்து, தனது இரண்டாவது மகளுக்கே முதல் மகளின் கணவரை கட்டிக்கொடுக்க நினைக்கிறார் அந்த அம்மா. ஒரு பெண் கணவன் வீட்டில் வேலைக்காரி போல நடத்தப்படுவது இந்த குடும்பத்தை காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ஆழமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படி அடுத்தடுத்த காட்சிகளால் இயக்குநர் முத்துகுமார் தெளிவாக நம்மை யோசிக்க வைத்து விடுகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் உங்கள் குடும்ப கெளரவத்தை பெண்களின் கால்களுக்கு நடுவே தேடாதீர்கள் என்பது போல ஒரு அழுத்தமாக வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் தான் பெண்களின் மொத்த வலியையும் உணர்த்திவிடுகிறது. பெண்கள் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது, ஆண்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று இன்ச் பை இன்ச் ஒவ்வொரு வீட்டிலும் நிகழும் மோசமான சிலவற்றை பெண்கள் பார்வையில் ரணத்துடன் சொல்வதில் இயக்குநர் அனைவரின் கைத்தட்டல்களையும் வாங்கிவிட்டார். 

உங்களை பாதுகாக்க தான் எங்கள் வாழ்க்கை முழுவதும் போராடுகிறோம் என்ற ஆணின் குரலுக்கு நடுவே, எப்பா சாமி உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க, எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லித்தர வேண்டாம் என்ற பெண்ணின் பதில் குரல் தரம். இந்த தொடரின் வெற்றிக்கு மற்றொரு காரணம், பல பெண்கள் இந்த தொடரில் உள்ள ஒரு காட்சியையாவது தங்கள் வாழ்க்கையில் நிஜத்தில் சந்தித்திருப்பது தான். என்ன படிக்க வேண்டும் என்று இன்றும் கூட பல வீடுகளில் பெண்களை முடிவெடுக்க விடுவதில்லை. 

அதெல்லாம் தாண்டி குழந்தை திருமணங்கள் 1990-களில் அதிகம் இருந்ததை காட்டுகிறார்கள். உண்மையில் இப்போதும் குழந்தை திருமணங்கள் அதிகளவு நடந்து வருகிறது. தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு நடத்திய ஆய்வில், அதிக குழந்தை திருமணம் நடைபெறும் டாப் 5 மாநிலகங்களில் தமிழகம் 4-வது இடத்தை பெற்றது. 12.8 சதவீத குழந்தை திருமணங்கள் தமிழகத்தில் நடைபெறுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 15 முதல் 19 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு கொரோனா லாக்டவுன் சமயத்தில் அதிகளவு திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் தோறும் குழந்தை திருமணம் குறித்து புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்த அயலி, 21-ம் நூற்றாண்டிலும் தேவைப்படுகிறாள் என்பது நிதர்சனமான உண்மை. பெண் குழந்தைகள் கனவை நிறைவேற்றுவோம், குழந்தை திருமணத்தை எதிர்ப்போம், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.