சென்னை: தமிழக மின்வாரியம் ஒரே நாளில் மிக அதிக அளவாக 4,700 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சாதனைப் படைத்துள்ளது
தமிழகத்தில் 5,800 மெகாவாட் திறன் கொண்ட தனியார் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினசரி 2,500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் தனது சொந்த மின்னுற்பத்தியை தவிர, மத்திய அரசு மற்றும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வருகிறது. அந்த வகையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து சூரியசக்தி மின்சாரத்தையும் கொள்முதல் செய்து வருகிறது.
கடந்த 11-ம் தேதி தனியார் சூரியசக்தி மின்னுற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 4,564 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்தது. இதுவே, இதுவரை ஒரே நாளில் மிக அதிகபட்சமாக சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்த அளவாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் 4,725 மெகாவாட் அளவு சூரியசக்தி மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்தது. இதன் மூலம், முந்தைய சாதனையை மின்வாரியம் முறியடித்துள்ளது.