காரைக்குடியில் அனுமதியின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றிய விவகாரத்தில் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தனது வீட்டில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலையை அமைத்திருந்தார். அதனை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைக்க இருந்தார்.
இந்நிலையில் பெரியார் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக நிர்வாகிகள் சிலர் பள்ளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்புடன், பெரியார் சிலை அகற்றப்பட்டது.
இந்நிலையில், இரண்டு முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் கண்ணனை, சிவகங்கை மாவட்ட வனத்திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், தேவகோட்டையில் காவல்துறை பொறுப்பு துணை கண்காணிப்பாளராக இருந்த கணேஷ்குமார் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
newstm.in