இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு: டிடிவி தினகரன் சொன்ன பிளாஷ் பேக்!

ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக மிக பலவீனமாகிவிட்டது. திமுக என்ற அரக்கணை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் வரும். கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வைக்கலாம் அல்லது வேறு ஒரு இடத்தில் வைக்கலாம் சுற்றுச்சூழலை பாதித்து கடலில் வைக்கக்கூடாது என்று டிடிவி தினகரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜி. ராமலிங்க ஜோதி இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தும் நோக்கோடு அமமுக நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பது தவறில்லை ஆனால் கடுமையான நிதி நெருக்கடியுள்ள இந்த நேரத்தில் பேனா சின்னம் வைப்பது தான் தவறு. வேண்டுமென்றால் அவர்கள் கட்சி சார்பில் பேனா நினைவுச் சின்னத்தை வைக்கட்டும். கடலில் வைத்து சுற்றுச்சூழல் பாதிக்காமல் அறிவாலயத்திலோ அல்லது வேறு இடத்திலயோ வைக்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம். திமுக என்ற அரக்கனை வெளியேற்ற அதிமுக தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். ஓ பன்னீர்செல்வம் வேட்பாளர் அறிவிக்கிறாரா என்பதை பொறுமையா இருந்து பார்ப்போம்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்பதை பார்ப்போம்.

2017ஆம் ஆண்டு நானும் ஓபிஎஸ்ஸும் இரட்டை இலை சின்னத்திற்காக மனு செய்தோம். அப்போது தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கையெழுத்து போட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இல்லை என்றால் சின்னம் முடக்கப்படும்.

அதிமுகவை ஒருங்கிணைக்கும் வகையில் பிஜேபி செயல்பட்டு வருகிறது என்று காங்கிராசர் கூறுகிறார்கள். பாஜக ஒருங்கிணைக்க நினைத்தால் ஏன் அவர்களுக்கு பயம் வருகிறது?

ஒரு சிலரின் சுயநலத்திற்காக அதிமுக மிக பலவீனமடைந்து வருகிறது. இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. சுயநலத்தோடு பணத் திமிரில் சிலர் செயல்படுகிறார்கள். இதனால்தான் அதிமுக இயக்கத்தை விட்டு வெளியேறி நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் போட்டியிடுகிறோம். கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் வருகின்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைப்பதற்காக முழு நம்பிக்கையுடன் போராடியிருக்கிறோம். காலம் கண்டிப்பாக தீர்வு தரும். திமுகவை வீழ்த்த ஜெயல்லிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் இணைகின்ற காலம் வரும்” என்று அவர் தெரிவித்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.