`ஏற்கெனவே திருமணமானவரா?’ தென்காசி மணப்பெண் கடத்தல் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மரம் அறுவை ஆலை நடத்தி வரும் குஜராத்தைச் சேர்ந்த நவீன் பட்டேலின் மகள் கிருத்திகா பட்டேல், உள்ளூரைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்ற இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மகள் காணாமல் போனதாக நவீன் பட்டேல் கொடுத்த புகாரை விசாரித்த குற்றாலம் போலீஸார், மணமக்களை காவல் நிலையத்துக்கு அழைத்திருந்தனர். அப்போது நடந்த மணப்பெண் கடத்தல் சம்பவம் சர்ச்சையானது

மணப்பெண் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சி

விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு கடந்த 27-ம் தேதி இருவரும் வந்தனர். அப்போது கிருந்த்திகா தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவருடன் அனுப்பி வைத்தனர். வழியிலேயே காரில் வந்த நவீன் பட்டேல் மற்றும் அவரது குடும்பத்தினர், மணப்பெண் கிருத்திகாவை கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மணமகன் மாரியப்பன் வினித் கொடுத்த புகாரில் உடனடியாக வழக்குப் பதியாமல் போலீஸார் இழுத்தடித்து மறுநாளே வழக்குப் பதிவு செய்தார்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இணையத்திலும் கடத்தல் வீடியோ வைரலாக பரவியது.

டி.ஜி.பி சைலேந்திரபாபு கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றதும் கடும் கோபமடைந்த அவர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், புகார் அளிப்பவர்களிடம் இருந்து உடனடியாக புகாரைப் பெற்று விசாரிக்க வேண்டும். ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களில் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், குற்றாலம் சம்பவத்தை நேரடியாகக் குறிப்பிடாமல் அந்த சம்பவம் பற்றியும் அதில் தெரிவித்திருந்தார்.

டி.ஜி.பி-யின் சுற்றறிக்கை

”சமீபத்தில் மணப்பெண் கடத்தப்பட்ட வீடியோ வைரலாக பரவிய நிலையில், அந்த காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாதது தவறானது. டி.எஸ்.பி-யிடம் கேட்டு வழக்குப் பதிவு செய்ய இருந்ததாக ஸ்டேஷன் அதிகாரி தெரிவிப்பதும்,, எஸ்.பி-யிடம் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக டி.எஸ்.பி குறிப்பிடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த மாவட்டத்தின் எஸ்.பி இந்த விவகாரத்தில் மிகவும் மோசமாகச் செயல்பட்டிருந்தார்” என டி.ஜி.பி சைலேந்திரபாபு காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குஜராத், ஜார்க்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணப்பெண் கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் மற்றும் உறவினர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து மணப்பெண்ணை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக, கிருத்திகாவுக்கு ஏற்கனவே உறவினருடன் திருமணம் நடைபெற்று விட்டதாகவும் அதற்கான ஆதாரத்தையும் அவரது தந்தை நவீன் பட்டேல் மாவட்ட எஸ்.பி சாம்சனிடம் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே திருமணம் நடந்ததற்கான சான்று

வழக்கறிஞரின் அஃபிடவிட் என்ற பெயரில் கிருத்திகா பெயரில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், “எனக்கு (கிருத்திகா) உறவினரான வசானி பட்டேல் என்பவருடன் கடந்த அக்டோபர் 29-ம் தேதி திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அதை அகமதாபாத் நகராட்சியிலும் பதிவு செய்துவிட்டோம். குற்றாலத்தில் என்னுடன் படித்த நண்பரான மாரியப்பன் வினித் என்னை தன்னுடன் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்ததுடன், என்னை வெளியிலும் விடாமல் அடைத்து வைத்திருந்தார்

நான் இது பற்றி எனது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததால் அவர்கள் வந்து என்னை மீட்டுச் சென்றார்களே தவிர, என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. என்னைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்த மாரியப்பன் வினித் என் தந்தை மற்றும் உறவினர்கள் மீது திட்டமிட்டு பொய்யாக புகார் அளித்திருக்கிறார். ஏற்கெனவே திருமணமான நான் என் பெற்றோருடன் செல்லவே விரும்புகிறேன். எனது திருமணத்துகான புகைப்படம் மற்றும் பதிவுச் சான்றையும் இணைத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்ட மனு போலீஸாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் திருமணம் நடந்ததாக வெளியிடப்பட்ட புகைப்படம்

ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி-யே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு சென்ற நிலையில், இந்த புதிய குழப்பத்தால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. கிருத்திகாவையும் மாரியப்பன் வினித்தையும் கிருத்திகா பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்பாக காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது இந்த ஆதாரங்கள் எதையும் அவர்கள் காட்டவில்லை. அத்துடன், ஏற்கெனவே திருமணமாகி விட்டதாகக் கூட தெரிவிக்காத நிலையில், தற்போது இப்படியொரு புதிய குழப்பத்தை கிருத்திகா தரப்பினர் மேற்கொள்வதாக மணமகன் மாரியப்பன் வினித் தரப்பினர் குமுறுகிறார்கள்.

மணப்பெண் கடத்தல் விவகாரத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரடியாகத் தலையிட வேண்டிய அவசியத்தை தென்காசி மாவட்ட காவல்துறையினர் உருவாக்கி வருவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.